எங்கள் ஆட்டத்தின் மீதே அதிக கவனம் உள்ளது: விராட் கோலி

எங்கள் ஆட்டத்தின் மீதே அதிக கவனம் உள்ளது: விராட் கோலி

virat

நாளை இந்தியா-இங்கிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி டிரெண்ட் பிரிட்ஜில் தொடங்குகிறது. போட்டி குறித்து விராட் கோலி கூறுகையில், இந்திய அணியின் கவனம் தற்போது தங்கள் ஆட்டத்தின் மீதே உள்ளது என்றார்.

அதாவது இங்கிலாந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது என்றாலும் அவர்கள் திட்டம் என்னவென்பது பற்றி இந்திய அணி யோசிக்கவில்லை என்றும் இந்திய அணி தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார் விராட் கோலி.

ஸ்கை ஸ்போர்ட்சிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

இங்கிலாந்து அணியினர் என்ன நினைக்கின்றனர் என்பதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள், அதுகுறித்து நாங்கள் எதுவும் கருத்துக் கூறுவதற்கில்லை.

எங்களைப் பொருத்தவரையில் நாங்கள் நன்றாகவே தயார்படுத்திக் கொண்டுள்ளோம், எங்களிடமும் சில திட்டங்கள், யோசனைகள் உள்ளன, அதை செயல்படுத்துவதிலேயே இப்போது எங்கள் கவனம் உள்ளது.

இங்கிலாந்து என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி நாங்கள் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் எங்களால் அவர்களுக்குச் சரிசமமாக ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியும்.

அவர்கள் அணுகுமுறை என்ன என்பது ஆட்டம் நடக்கும்போதுதான் தெரியும். எனவே நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதே இப்போதைக்குச் சிறந்தது.

இங்கிலாந்து கேப்டன் குக்கிற்கு தற்போது விஷயங்கள் அவ்வளவு சுலபமாக இல்லை என்பதை அறிவோம், எனவே அவருக்கு மேலும் பல கடினமான தருணங்களைக் கொடுத்து நெருக்கடி ஏற்படுத்துவோம்.

அவர் மிகச்சிறந்த வீரர் என்பதை அறிவோம், எப்போது வேண்டுமானாலும் அவர் தனது பேட்டிங் ஃபார்மை கண்டுபிடித்துக் கொள்ளக்கூடும். அவரது பேட்டிங்கைச் சுற்றியே இங்கிலாந்து அணியின் பேட்டிங் இருப்பதால் அவரை விரைவில் பெவிலியன் அனுப்புவதே எங்கள் திட்டமாக இருக்க முடியும்.

அவர் ஆடத் தொடங்கினாரென்றால் மிகப்பெரிய சதங்களை எடுப்பார் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே அவர் விக்கெட்டை விரைவில் வீழ்த்துவது அவசியம்.

இவ்வாறு கூறியுள்ளார் கோலி.