MH 370 மலேசியன் ஏர்லைன்ஸ், அரசு மீது 2 சிறுவர்கள் வழக்கு

MH 370 மலேசியன் ஏர்லைன்ஸ், அரசு மீது 2 சிறுவர்கள் வழக்கு

mh17

அக்டோபர் 31, மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் 2 மகன்கள் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்தபோதிலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
தெற்கு இந்திய பெருங்கடலில் பல நாடுகள் மாதக்கணக்கில் தேடியும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த மலேசியாவைச் சேர்ந்த ஜீ ஜிங் ஹாங்கின் மகன்கள் ஜீ கின்சன்(13), ஜீ கின்லேண்ட்(11) ஆகியோர் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் அந்த மனுவில் கூறியிருப்பதாவது, மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கவனக் குறைவாக நடந்துள்ளது. பாதுகாப்பான பயணத்தை அளிக்க அந்நிறுவனம் தவறிவிட்டது. எங்களின் தந்தை மாயமானதால் எங்களுக்கு ஏற்பட்ட மனவருத்தம், கவலை, ஆதரவில்லாமல் தவிப்பதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் மலேசிய விமானைப்படை தளபதி, அரசு மீதும் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுவர்களின் தந்தை இன்டர்நெட் வியாபாரம் செய்து மாதம் ரூ. 3 லட்சத்து 19 ஆயிரம் சம்பாதித்து வந்தார். இது குறித்து அவர்களின் வழக்கறிஞர் அருணன் செல்வராஜ் கூறுகையில், நாங்கள் 8 மாதங்கள் காத்திருந்தோம். பல நிபுணர்களுடன் பேசிய பிறகே, ஆதாரங்கள் இருப்பதால் தான் வழக்கு தொடர்ந்தோம். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் பெரிய விமானம் மாயமானதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.