55 தீவிரவாதிகளை தூக்கில் போட பாகிஸ்தான் அரசு தயாராகிறது

55 தீவிரவாதிகளை தூக்கில் போட பாகிஸ்தான் அரசு தயாராகிறது

death

டிசம்பர் 23, பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளியில் தலீபான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் பள்ளி குழந்தைகள் உள்பட 148 பேர் பலியானார்கள். இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து அங்கு தூக்கு தண்டனை மீண்டும் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் 2008-ம் ஆண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தூக்கு தண்டனை மீண்டும் அமலுக்கு வந்தது. நேற்று முன்தினம் பர்வேஸ் முஷரப் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 4 பேர் தூக்கில் போடப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து தடை நீங்கிய பின்னர் இதுவரை 6 பேர் தூக்கில் போடப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றிவருவதற்கு வலதுசாரிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 500 தீவிரவாதிகள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர். 2012-ம் ஆண்டு முதல் அவர்களில் பலரது கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளது. அந்நாட்டில் தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதன் காரணமாக முந்தைய பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் சர்தாரி அந்த கருணை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்.

இப்போது, பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேன் அந்த 500 பேரில் 55 தீவிரவாதிகளின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.

உள்துறை மந்திரி நிசார் அலிகான் கூறும்போது, ‘‘கோர்ட்டு மூலம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளுக்கு அடுத்தடுத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தங்கள் தோழர்களை தூக்கில் போடுவதன் காரணமாக தீவிரவாதிகளின் எத்தகைய நடவடிக்கைகளையும் சந்திக்க நாடு தயாராக இருக்கிறது’’ என்றார்.