38-வது ஆண்டு புத்தக கண்காட்சி சென்னையில் 9-ந்தேதி தொடக்கம்

38-வது ஆண்டு புத்தக கண்காட்சி சென்னையில் 9-ந்தேதி தொடக்கம்

2015_slide

ஜனவரி 6, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது. அந்தவகையில் 38-வது ஆண்டு புத்தக கண்காட்சி வரும் 9-ந்தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மங்கள்யான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். 2 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 700-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் நூல்கள் இடம் பெறுகின்றன. அனைத்து விதமான புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கண்காட்சி நடக்கும் நாட்களில் அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், அறிஞர்கள், இதழாளர்கள், பிற படைப்பாளிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர். இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள், ஓவியப்போட்டிகள், சிறுகதைப்போட்டிகள், அனைத்துப் பிரிவினருக்குமான விவாத மேடை, குறும்படங்கள், கலை நிகழ்ச்சிகள், விருது வழங்குதல், புத்தக வெளியீடு, நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்- வாசகர் சந்திப்பு, உரைநடை கவிதை அரங்கம் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

வரும் 12, 13 தேதிகளிலும், 19 முதல் 21-ந்தேதி வரை பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார இறுதி விடுமுறை நாள்களில், அதாவது வரும் 10, 11 தேதிகளிலும், 14 முதல் 18 தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். நுழைவுக்கட்டணம் ரூ.10. 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்குக் கட்டணம் கிடையாது. பார்வையாளர்களுக்கு சிறப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சிறந்த பதிப்பாளர்கள், விற்பனையாளர், சிறந்த குழந்தை எழுத்தாளர், சிறந்த ஆங்கில எழுத்தாளர், சிறந்த சிறுவர் அறிவியல் நூல், சிறந்த தமிழ் அறிஞர், சிறந்த நூலகர் விருதுகளும் வழங்கப்படுகிறது. கண்காட்சியையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் காலை 9½ மணிக்கு ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று ஒரு வாசிப்பு அரங்கம் நடத்தப்படுகிறது. இதனை கடலோரக் காவல்படை இயக்குனர் சைலேந்திரபாபு தொடங்கி வைக்கிறார்.