3ஆவது நாளாக இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு

3ஆவது நாளாக இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு

lebisrae

காஸாவில் 3ஆவது நாளாக இஸ்ரேல் விமானங்கள் வியாழக்கிழமையும் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. ஹமாஸ் தீவிரவாதிகளின் 300 நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 20 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 3 நாள்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 18 குழந்தைகள், 10 பெண்கள் உள்பட மொத்தம் 64 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாலஸ்தீன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், “தெற்குபகுதி நகரமான கான் யூனிஸில் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், வீடு ஒன்றின் மீது குண்டு விழுந்ததில், அங்கிருந்த அப்பாவி பாலஸ்தீனர்கள் 8 பேர் உயிரிழந்தனர். அதேபகுதியில் உள்ள தேநீர் விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 9 பேர் பலியாகினர். மேற்கு காஸாவில் கார் ஒன்றின் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீசியதில், அதில் சென்ற 3 பேர் இறந்தனர். இந்த தாக்குதல்களில் 25 பேர் படுகாயமடைந்தனர்.

புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் இயக்கத்தினரின் 46 கட்டுப்பாட்டு அறைகள் தகர்க்கப்பட்டன’ என்றனர்.

இதுகுறித்து காஸா பகுதி மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், “இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளே ஆவர்’ என்றனர்.

இதனிடையே, கான் யூனிஸ் விமானத் தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி பாலஸ்தீனர்கள் பலியான சம்பவத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. எனினும், இஸ்ரேல் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தரப்பில், “அந்த வீடு, ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் கமாண்டர் ஓடே கவாரேக்கு சொந்தமானது. அவரது தலைமை அலுவலகமாக அந்த வீடு இருந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில், வியாழக்கிழமை பலியான 20 பேரையும் சேர்த்து இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.