2 சகோதரிகள் கற்பழித்து கொலை: அகிலேஷ் யாதவ் வீடு முற்றுகை

j4

உ.பி.யில் 2 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் மாநிலத்தில் சட்டம்– ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பிரதமர் மோடியிடம் ராம்விலாஸ் பஸ்வான் அறிக்கை தாக்கல் செய்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் படான் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் தலித் சகோதரிகள் 2 பேரை 7 பேர் கும்பல் கற்பழித்து கொலை செய்தது. அவர் களது பிணத்தை மரத்தில் தொங்கவிட்டனர். இருவருககும் 14, 15 வயதுதான் இருக்கும்.

போலீஸ் விசாரணையில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் உள்பட 7 பேர் கும்பல் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து 2 போலீஸ்காரர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் கைதானார்கள். மொத்தம் 5 குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி முன்னாள் சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

2 போலீஸ்காரர்களே கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டு இருப்பது முதல் – மந்திரி அகிலேஷ் யாதவுக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. அங்கு சட்டம்–ஒழுங்கு கெட்டுவிட்டதாக பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.

இன்று லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் படான் சென்று பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நடந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தினர். அவருடன் மகன் சிராக் பஸ்வானும் சென்று இருந்தார்.

பின்னர் ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களிடம் கூறுகையில், படான் கற்பழிப்பு சம்பவத்தில் உ.பி. அரசு மீதான புகார்கள் அடங்கிய அறிக்கையை பிரதமர் நரேந்திரமோடியிடம் அளிப்பேன் என்றார்.

இதற்கிடையே உ.பி.யில் சட்டம் – ஒழுங்கு கெட்டு விட்டதாக கூறி லக்னோவில் முதல் – மந்திரி அகிலேஷ் யாதவ் வீட்டை முற்றுகையிடப் போவதாக பா.ஜனதா மகளிர் அணி அறிவித்து இருந்தது. இதற்காக பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் லக்னோவில் கூடினார்கள். அவர்கள் அகிலேஷ் யாதவ் வீடு நோக்கி பேரணியாக புறப்பட்டனர். பெண்கள் கையில் வளையலுடன் ஆவேசத்துடன் அகிலேஷ் யாதவை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

அவர்களை போலீசார் முன்னேறிச் செல்ல விடாமல் தடுப்பு ஏற்படுத்தி அரண்போல் நின்றனர். ஏராளமான பெண் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அகிலேஷ் யாதவ் வீடு நோக்கி முன்னேறினார்கள்.

போலீசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயன்றனர். தொடர்ந்து அங்கு போராட்டம் நீடிப்பதால் லக்னோவில் பதட்டம் நிலவுகிறது.