விமான நிலைய பாதுகாப்பு சோதனையை அதிகரித்துள்ள இங்கிலாந்து

விமான நிலைய பாதுகாப்பு சோதனையை அதிகரித்துள்ள இங்கிலாந்து

china

தலிபான் தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதன் விளைவாக இங்கிலாந்து அரசு தங்கள் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு சோதனைளைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்பு எப்பொழுதும இல்லாதவிதத்தில் அல்கொய்தாவினர் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என்று அமெரிக்காவிடமிருந்து நம்பத் தகுந்த தகவல்களைப் பெற்றதன் காரணத்தினால் இங்கிலாந்து இத்தகைய முயற்சிகளில் இறங்கியுள்ளது. 



அல்கொய்தா பயங்கரவாதிகள் ஐபோன்கள், சாம்சங் மொபைல்போன்கள் போன்றவற்றை விமானங்களில் வெடிகுண்டுகளாக பயன்படுத்தக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து அமெரிக்கா செல்லும் ஐரோப்பிய, இங்கிலாந்து பயணிகளின் அனைத்து மின்னணு சாதனங்களும் விமான நிலையங்களின் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும். 



மொபைல் போன் உட்பட அனைத்து சாதனங்களையும் அதிகாரிகள் இயக்கிப் பார்க்கக்கூடும்.அந்த நேரத்தில் அவற்றில் சார்ஜ் இல்லாவிட்டால் பயணிகள் அந்த சாதனங்களை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று இங்கிலாந்தின் போக்குவரத்துத் துறை பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 



மேலும், சம்பந்தப்பட்ட பயணிகளும் கூடுதல் சோதனைக்கு உள்ளாகக்கூடும் என்றும் அரசு அறிக்கை தெரிவிக்கின்றது.  அதுபோல் பயணிகளின் செல்போன்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை சோதனை செய்வதை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அரசு கட்டாயமாக்கியுள்ளது. 



லண்டனின் உயர் பாதுகாப்புத்துறை அதிகாரியான சர் மால்கம் ரிப்கைன்ட் உளவுத்துறை மூலம் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே விமான நிலைய பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஞாயிறன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.