வருடாந்திர பிரம்மோற்சவ விழா: திருமலையில் தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு ரத்து

வருடாந்திர பிரம்மோற்சவ விழா: திருமலையில் தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு ரத்து

tirupathi9813

திருமலை–திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 26–ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 4–ந் தேதி வரை (9 நாட்கள்) நடக்க இருக்கிறது. விழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலும் வாகன ஊர்வலம் நடக்கும்.

அதில் பெரிய சேஷ வாகனம், சிறிய சேஷ வாகனம், அம்ச வாகனம், சிம்ம வாகனம், கற்பக விருட்ச வாகனம், மோகினி அவதார பல்லக்கு வாகனம், கருட வாகனம், அனுமன் வாகனம், யானை வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, குதிரை வாகனம் ஆகியவைகள் சுத்தம் செய்யப்பட்டு, அதனை சீரமைத்து மெருகேற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அத்துடன் தங்கத்தேருக்கு தங்க முலாம் பூசும் பணியும் நடந்து வருகிறது.

விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் தங்குவதற்காக திருமலையில் உள்ள விடுதிகளில் 6 ஆயிரத்து 650 அறைகள் உள்ளன. அதில் 50 ஆயிரம் பக்தர்கள் தங்கலாம். ரூ.50 மற்றும் ரூ.750 கட்டணத்தில் 5 ஆயிரத்து 600 அறைகள் உள்ளன. ரூ.1,000, ரூ.6 ஆயிரம் கட்டணத்திலும் தங்கும் அறைகள் தயார் நிலையில் உள்ளன. இதுதவிர, 4 இடங்களில் பெரிய அளவிலான அரங்குகள் உள்ளன. அதில், 20 ஆயிரம் பேர் வரை தங்கலாம்.

மேலும் திருமலை–திருப்பதி தேவஸ்தானத்துக்கு தனியார் கட்டிக் கொடுத்த தங்கும் விடுதிகளும், தனியார் மடங்களுக்கு சொந்தமான விடுதிகளும் உள்ளன. அவற்றில் 50 சதவீத அறைகளை பிரம்மோற்சவ விழா நேரத்தில் திருமலை–திருப்பதி தேவஸ்தானம் கையகப்படுத்தி உள்ளது. அந்த அறைகள் பக்தர்களுக்கு வாடகைக்கு வழங்கப்படும்.

மேற்கண்ட தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்வது ரத்து செய்யப்பட்டு உள்ளது. அறைகளுக்காக பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்களும் நிராகரிக்கப்படும். ‘முன்னால் வருபவர்களுக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.