மிஃபா அணியின் அபார வெற்றி, இந்திய சமுதாயத்தின் வெற்றி

மிஃபா அணியின் அபார வெற்றி, இந்திய சமுதாயத்தின் வெற்றி

foot

ஆகஸ்டு 25, எப்ஏஎம் கிண்ணச்சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு விளையாட மிஃபா அணிக்கு வாய்ப்பு கிட்டுமா? என ஆவலோடு காத்திருந்த இந்திய சமுதாயத்தினரின் எதிர்பார்ப்பு 1 கோல் வித்தியாசத்தில் களைந்தது. மலாக்கா அணியும், மிஃபா அணியும் 36 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில் கோல்கள் ஒப்பீட்டின் அடிப்படையில் பி பிரிவில் மிஃபா அணி 2-ம் இடத்தை பெற்றது. இருப்பினும் எப்ஏஎம்-ல் பங்கேற்ற 2 வது வருடத்திலேயே பிரமாண்ட வெற்றியை மிஃபா பதிவு செய்து சமுதாயத்தினரின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மிஃபா அணி ஏர் ஆசியா அணியையும், மலாக்கா அணி கேஎல்-யெங் பைட்டர்ஸ் அணியையும் எதிர்கொண்டு விளையாடின. யூபிஎம் திடலில் நடைபெற்ற ஆட்டத்தில் நமது அணி அபாரமாக விளையாடி ஏர் ஆசியா அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.

மலாக்கா அரங்கில் நடைபெற்ற மற்றுமொரு ஆட்டத்தில் கே.எல்.யெங் பைட்டர்ஸ் அணி, மலாக்கா அணியை 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்திய நிலையில் நமது அணியும், மலாக்கா அணியும் 36 புள்ளிகளை பெற்று சமநிலை கண்டது. கோல்கள் ஒப்பீடு செய்யப்பட்டதை தொடர்ந்து மலாக்கா அணி முதல் இடத்தை பெற்றது.

அதனைத்தொடர்ந்து ஏ பிரிவில் முதல் இடம் பெற்ற பெர்லிஸ் அணியும், பி பிரிவில் முதல் இடம் பெற்ற மலாக்கா அணியும் எப்.ஏ.எம் கிண்ணச்சாம்பியன் பட்டத்திற்கு விளையாடவிருக்கிறார்கள். புள்ளிகளின் அடிப்படையில் நமது அணி பிரிமியர் லீக் ஆட்டங்களில் பங்கெடுக்குமா? என்பது கூடிய விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமது அணியின் வெற்றி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு டத்தோ டி.மோகன் கூறுகையில் நமது அணி எப்ஏஎம் லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி பி பிரிவில் 2-ம் இடத்தை பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. நிர்வாகி ஜெ.தினகரன், பயிற்றுநர் ஜேக்கப் ஜோசப், துணை நிர்வாகி ஆறுமுகம் சின்னச்சாமி, மற்றும் மிஃபா குழுவினரின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது என்றார் அவர்.

மேலும் நாம் 1 கோல் அதிகமாக அடித்திருந்தாலோ, அல்லது கோல் எதுவும் பெறாமல் 2-0 என்ற நிலையில் வெற்றி பெற்றிருந்தாலோ முதல் இடத்தை அடைந்திருப்போம். சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு விளையாடும் வாய்ப்பையும் பெற்றிருப்போம். இருப்பினும் நமது அணியின் தரமும், ஆட்டக்காரர்களின் தன்னம்பிக்கையும் மனநிறைவை அளிக்கிறது. இந்த வேளையில் மிஃபா வெற்றியோடு பயணிக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.

நமது சமுதாயத்தை பிரதிநிதிக்கும் மிஃபா அணியின் வளர்ச்சி சமுதாயத்தினரை பெருமை கொள்ள வைக்கிறது. தரம் வாய்ந்த, மிகப்பெரிய முதலீடு கொண்ட மாநில அணிக்கு நிகராக நமது மிஃபா அணி திறம்பட செயல்பட்டு 36 புள்ளிகளை பெற்றது சாதாரண காரியம் அல்ல. காற்பந்து துறையில் இந்திய சமுதாயத்தை முன்னெடுக்க மிஃபா மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வேண்டும் என சமுதாய கால்பந்து ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.