திருவிழாவில் பங்கேற்க தென் கொரியா செல்லும் போப்

திருவிழாவில் பங்கேற்க தென் கொரியா செல்லும் போப்

140411-pope-8a_b4d0521276371be2d08ce7b83303a3a0

கத்தோலிக்க கிறித்துவர்களின் மதகுருவான போப் பிரான்சிஸ் இந்த மாதம் மத்தியில் தென் கொரியாவில் நடைபெற உள்ள ஐந்து நாள் ஆசிய கத்தோலிக்க இளைஞர்கள் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வரும் 13ஆம் தேதியன்று புறப்பட உள்ளார். 

வழக்கமாக விமானம் கடந்து செல்லும் நாடுகளின் தலைவர்களுக்கு வாழ்த்துச்செய்திகளை அனுப்புவது போப்பினுடைய நடைமுறையாகும். அதுபோல் சீனா வழியே செல்லவிருக்கும் போப் பிரான்சிஸ் தனது வாழ்த்துச் செய்தியினை சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும் அனுப்பக்கூடும் என்று வாடிகன் தகவல்கள் தெரிவித்துள்ளன.  

கடந்த 1951ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமாக ஆட்சிக்கு வந்தது முதலே சீனா போப்புடனான தனது உறவுகளை சீராக வைத்திருக்கவில்லை. போப்பினுடைய அதிகாரத்தைத் தவிர்த்த சீன அரசு அந்நாட்டில் இருந்த தேவாலயங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. 

இதனால் கடந்த 1989ஆம் ஆண்டு போப் ஜான் பால்-II தென் கொரியாவிற்கு சென்றபோது சீனா வழியே பறக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் ரஷ்யா மார்க்கமாக சென்ற அவர் ரஷ்ய அதிபருக்கு சம்பிரதாயப்படி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  

ஆனால் அவருக்குப் பின்னால் பதவியில் இருந்த போப் பெனடிக்ட் XVI சீனாவில் இருந்த 8-12 மில்லியன் வரையிலான கத்தோலிக்கர்களுடன் உறவுகளை மேம்படுத்தும் விதமாகவே செயல்பட்டுவந்தார். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மறைமுகமாக இவரையே குருவாக வழிபட்டுவந்தனர்.

இவருக்குப்பின் வந்துள்ள போப் பிரான்சிஸ் இந்த ஆதரவைத் தொடர்ந்து வருகின்றார்.போப் பதவிக்கான தனது தேர்விற்கு சில மணி நேரங்களுக்குப்பின் சீனாவில் அதிபர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஜி ஜின்பிங்குக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியதாகவும் அதற்கு சீன அதிபரிடமிருந்து பதில் வந்ததாகவும் பத்திரிகை செய்தி ஒன்றில் அவரே தகவல் வெளியிட்டிருந்தார்.  

அதனால் இந்த முறை சீனா வழியே பறக்க அவருக்கு அனுமதி கிட்டும் என்றும், சீன அதிபருக்கு போப் தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி ஏராளமான சீன இளைஞர்களும் கலந்துகொள்ளக்கூடும் இந்தத் திருவிழா நிகழ்ச்சிகளின் கடைசி நாளான 18ஆம் தேதியன்று உலக சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக பொது பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை மேற்கொள்ளும் போப் அப்போது வடகொரியா மற்றும் சீனா குறித்தும் குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.