திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா: 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்

திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா: 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்

images (11)

டிசம்பர் 15, புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறில் சனீஸ்வரன் கோவில் உள்ளது. நாட்டிலேயே சனீசுவர பகவானுக்காக தனி ஸ்தலம் இங்கு மட்டுமே உள்ளது.

2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அதன்படி நாளை துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு சனிபகவான் இடம் பெயர்கிறார்.

இதையொட்டி நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. திருநள்ளாறு கோவிலில் இந்த விழா பிரமாண்டமாக நடக்கிறது. சனிப்பெயர்ச்சியின் போது திருநள்ளாறு சனிபகவானை தரிசனம் செய்தால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்.

எனவே நாளை சனீசுவரனை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சனிபகவான் சரியாக நாளை பகல் 2.43 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது சனீஸ்வரன் கோவிலில் மகாதீபாராதனை காண்பிக்கப்படும். அதை தரிசனம் செய்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அந்த இடத்தில் கூடுவார்கள்.

நாளை மட்டுமே 10 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கின்றனர். எனவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நான்கு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி. வரிசை, 500 ரூபாய் கட்டண வரிசை, 200 ரூபாய் கட்டண வரிசை, பொது வரிசை என 4 வரிசைகள் உள்ளன. அதில் கியூவில் நிற்பதற்காக தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

திருநள்ளாறு கோவிலில் நளன் குளம் உள்ளது. இந்த குளத்தில் புனித நீராடிவிட்டு சனிபகவானை தரிசித்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் புனித நீராடுவார்கள். ஒரே நேரத்தில் 50 ஆயிரம் பக்தர்கள் வரை நீராடும் வகையில் பிரமாண்டமான முறையில் நளன்குளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆழமான பகுதிக்குள் சென்று பக்தர்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக குளத்துக்குள்ளேயே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினரும் தயாராக நிறுத்தப்படுகின்றனர்.

திருநள்ளாறில் 2 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூரில் இருந்து பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுவத்துவதற்காக பல இடங்களில் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுக்களும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை கூடும் ஒன்றும் தயார் நிலையில் உள்ளது.