தாப்பா தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் ஆசிரியர்கள் மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்

தாப்பா தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் ஆசிரியர்கள் மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்

image4

நவம்பர் 6, 1914-ல் 52 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட தேசிய வகை தாப்பா தமிழ்ப்பள்ளி, இவ்வாண்டு 100-வது ஆண்டைத் தொட்டுள்ளது. மொத்தம் 34 தலைமையாசிரியர்கள் இப்பள்ளியில் பணியாற்றியுள்ள வேளையில், 35-வதாக இப்பள்ளியிலேயே பயின்ற அ. வனஜா, தற்போது 4 ஆண்டுகளாகத் தலைமையாசிரியர் பணியை மேற்கொண்டு வருகிறார்.
பள்ளியின் நூற்றாண்டு விழாவோடு புதிதாக அமைக்கப்பட்ட இணைக்கட்டடத் திறப்புவிழாவும், நவம்பர் மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை ஒட்டிய பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கூட்டம் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் தலைமையாசிரியருடன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர். கோபால், துணைத் தலைமையாசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர். பள்ளியின் நிர்வாகமும், பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்யும் இவ்விழா, இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டத்தோ மு. சரவணனின் முழு ஆதரவில் நடைபெற உள்ளதாய் வனஜா தெரிவித்தார்.
சரவணன் முயற்சியில் கட்டப்பட்ட புதிய இணைக்கட்டடத் திறப்புவிழா அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ள வேளையில், அதனைத் தொடர்ந்து பள்ளியின் நூற்றாண்டு வரலாற்றுக் கண்காட்சிகள், நூற்றாண்டு மலர் வெளியீடு, மாணவர்களின் இயல் – இசை – நாடகப் படைப்பு ஆகிய சிறப்பம்சங்களுடன் இரவு 10 மணிவரை கலைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது என இதில் தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வோராண்டும் பள்ளியின் யு.பி.எஸ்.ஆர் தேர்ச்சி விகித அதிகரிப்புடன் பாடப் புத்தக நிர்வகிப்புப் பகுதியில் தேசிய அளவில் போட்டிக்குத் தேர்வு பெற்று 5-வது இடத்தைப் பிடித்து வெற்றிபெற்ற பள்ளியாகத் திகழும் அதேவேளையில் புறப்பாட நடவடிக்கை, அறிவியல் விழா போன்றவற்றிலும் தேசிய அளவிற்கு தேர்வு பெற்ற பள்ளியாகப் பெருமைகொண்டிருக்கிறது என தலைமையாசிரியர் குறிப்பிட்டார்.
மேலும் பல்வேறு துறைகளில் பள்ளி பல வெற்றிகளைக் கண்டு இந்நூற்றாண்டு விழாவும், இணைக்கட்டடத் திறப்புவிழாவும் மேலும் பள்ளிக்குப் பெருமை சேர்க்கவிருக்கிறது என பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோபால் குறிப்பிட்டார். இந்நிகழ்விற்கு முன்னாள் தலைமையாசிரியர்கள் அல்லது அவர்தம் குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் வருகை புரிவது முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது எனக் குறிப்பிட்ட அவர், இவ்வருகையின் வாயிலாக பள்ளியின் வளர்ச்சி மற்றும் மாணவர் தரம் மேம்பாட்டுக்கு உதவும் நோக்கத்தில் முன்னாள் மாணவர் கழகமும் அமைக்கவிருப்பத்தைத் தெரிவித்துக்கொண்டார்.
தொடர்புக்கு : குமரன் 012-24676506 / கோபால் 012-2841325 / அலுவலகம் 05-4014510 / மின்னஞ்சல் முகவரி sjktt100y@gmail.com அல்லது sjkttapah@gmail.com