தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் 11 குழந்தைகள் இறந்தன

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் 11 குழந்தைகள் இறந்தன

24_cradle_baby_732431e

நவம்பர் 18, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 11 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தன. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுப்பற்றி தெரியவந்ததும் சென்னையில் இருந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் குழுவினர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது இறந்த குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சினை இருந்ததாக தெரிந்தது.

இந்த நிலையில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் பிரிவின் தலைமை மருத்துவர் பேராசிரியர் டாக்டர் குமுதா தலைமையில் டாக்டர்கள், நர்சுகள் கொண்ட 15 பேர் குழுவினர் நேற்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவில் பணியாற்றிய தர்மபுரி டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்களை விடுவித்தனர். தொடர்ந்து சென்னையில் இருந்து வந்த குழுவினர் நேற்று இரவு முதல் பச்சிளங்குழந்தைகள் பிரிவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சென்னையில் இருந்து வந்த 15 பேர் கொண்ட குழுவினர் தற்போது பச்சிளங்குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்கள் குழந்தையின் தாயை மட்டுமே அனுமதிக்கிறார்கள். மற்ற யாரையும் அனுமதிக்கவில்லை. இதற்கு முன்பு அனைவரும் அந்த வார்டுக்குள் வந்து சென்றனர்.

மேலும் பச்சிளங்குழந்தைகள் வார்டு முன்பு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் திரண்டு இருந்தனர்.

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதுவரை டீன் பதவி காலியாகவே இருந்தது. தற்போது குழந்தைகள் சாவு காரணமாக டீன் பொறுப்பில் இருந்த இளங்கோவன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நாராயணபாபு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக கூடுதல் பொறுப்பாக நேற்று நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று கொண்டார். இவரும் குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய டீன் நாராயணபாபு கூறும் போது, குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. யாரும் பயப்பட தேவையில்லை என்றார்.