சுனில்நரீன் முடிவுக்கு கேப்டன் காம்பீர் ஆதரவு

சுனில்நரீன் முடிவுக்கு கேப்டன் காம்பீர் ஆதரவு

j20

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதைவிட ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் விளையாடவே சுனில் நரீன் முடிவு செய்தார். வெஸ்ட்இண்டீசை சேர்ந்த அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான பயிற்சி முகாமில் இன்று (1–ந்தேதி) இணைய வேண்டும் என்று வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அவருக்கு கெடு விதித்தது. இதனால் தர்ம சங்கடத்துக்கு சுனில் நரீன் ஆளானார்.

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாட அவர் முடிவு செய்தார். தனது முடிவை அவர் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தார். சுனில் நரீனின் இந்த முடிவுக்கு கொல்கத்தா கேப்டன் காம்பீர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக காம்பீர் கூறும்போது, கொல்கத்தா அணியின் வீரர் என்ற முறையில் நரீனுக்கு இன்னும் ஒரு ஆட்டமே இருக்கிறது. அதற்குள் கெடு விதிப்பது துரதிருஷ்ட வசமானது. எந்த ஒரு வீரராக இருந்தாலும் இந்த முடிவை தான் எடுப்பார்கள். எனவே அவரை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் என்றார்.

இதற்கிடையே நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியில் இருந்து சுனில் நரீன் கழற்றிவிடப்பட்டுள்ளார். வருகிற 8–ந்தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டாலும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு 20 ஓவர் போட்டியில் அவரது தேர்வு பரிசீலிக்கப்படும் என்று வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.