“சுகாதார சேவைகளை விரிவாக்குவோம்” – தோக்கியோ மாநாட்டில் டாக்டர் சுப்ரா

“சுகாதார சேவைகளை விரிவாக்குவோம்” – தோக்கியோ மாநாட்டில் டாக்டர் சுப்ரா

15july_japansubra_5

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் “அனைத்துலக சுகாதார சேவைகள் அனைவருக்கும் வழங்குதல் மற்றும் முதுமையடையும் மக்கள் தொகை” என்ற கருப்பொருளில் ஜூலை 15 முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜப்பான் மற்றும் ஆசியான் சுகாதார அமைச்சர்களின் கூட்டு மாநாட்டில் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து கொண்டார்.

சுகாதார நலன் குறித்த சேவைகள் குறித்து, ஜப்பான் மற்றும் ஆசியான் சுகாதாரத் துறை தலைவர்கள் தங்களுக்கிடையில் அணுக்கமான ஒத்துழைப்பு தொடர்வதை மறு உறுதிப்படுத்தியதோடு, ஆசியான் மற்றும் ஜப்பானுக்கிடையிலான அனைத்துலக சுகாதாரச் சேவைகள் அனைவருக்கும் வழங்கப்படுவதற்கான முயற்சிகளை 2030 ஆண்டு இலக்கை நோக்கி முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகளை முடுக்கி விடும் கடப்பாட்டையும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து ஜப்பானிய சுகாதார அமைச்சருடன், மலேசிய சுகாதார அமைச்சின் சார்பில் புரிந்துணர்வு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றிலும் டாக்டர் சுப்ரா கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனைத்துலக சுகாதார சேவைகள் வழங்குவதில் ஒத்துழைப்பு, மருத்துவ தொழில்நுட்பம், நோய்கள் கட்டுப்பாடு, கண்காணிப்பு, பயிற்சி மற்றும் ஆய்வு மேம்பாடுகள், மேற்பார்வை போன்ற துறைகளில் ஒத்துழைப்புகள் மேம்படுத்தப்படும்.

ஜப்பான் மற்றும் ஆசியான் சுகாதார அமைச்சர்களுக்கிடையிலான தோக்கியோ மாநாட்டில் நேற்று சனிக்கிழமை (15 ஜூலை 2017) டாக்டர் சுப்ரா  ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

  • மலேசியாவைப் பொறுத்தவரையில் அனைத்துலக சுகாதார சேவைகளை அனைவருக்கும் வழங்கும் கடப்பாட்டை மலேசிய அரசாங்கம் கொண்டிருப்பதால், மலேசியா இந்தத் துறையில் முன்னணி நாடாக விளங்குகிறது. அடிப்படை, நடுத்தரம், உயர்தரம் என மூன்று நிலைகளிலும் சுகாதார சேவைகள் வழங்கப்படுவதில் நாடு சில சவால்களையும் சந்தித்து வருகிறது. இரண்டு முனைகளில் மலேசியாவில் சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன. ஒன்று தனியார் துறை மற்றொன்று பொதுத் துறை.
  • பொதுத் துறை வழியாக 98 சதவீத சுகாதார செலவினங்களை அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது. தனியார் துறையைப் பொறுத்தவரை தனியார் காப்புறுதி நிறுவனத் திட்டங்கள், முதலாளிகள் தங்களின் ஊழியர்களுக்கு மருத்துவக் கட்டணங்களைச் செலுத்துவது, அல்லது சிகிச்சை பெறுபவர்களே தங்களின் சிகிச்சைக் கட்டணங்களை நேரடியாகச் செலுத்துவது ஆகிய மூன்று வழிகளில் தனியார் துறை, சுகாதார சேவை செலவினங்களின் சுமைகளைக் குறைப்பதில் பங்கெடுக்கிறது.
  • இதில் மொத்த சுகாதார செலவினங்களில் சுமார் 38 சதவீதம் சிகிச்சை பெறுபவர்கள் சொந்தமாகச் செலுத்துகிறார்கள். மலேசியாவின் மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 4.4 சதவீதம் சுகாதார செலவினங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
  • இதுபோன்ற சுகாதார சேவையை, தற்போது நாம் வழங்கி வருவது போல் எதிர்வரும் காலத்திலும் நம்மால் தொடர்ந்து வழங்கி வரமுடியுமா என்ற அக்கறையும், எண்ணமும் நமக்கு ஏற்பட்டுள்ளது.
  • சுகாதார சேவைகள் வழங்குவதில் நமக்கிருக்கும் சவால்களில் மிகப் பெரியது தொற்றா நோய்களினால் ஏற்படும் சுமைகளாகும். சுகாதார சேவைகளுக்கான செலவுகள் அதிகரித்து வருகின்றன என்பதும், ஏற்கனவே இருக்கும் – அதே சமயத்தில் புதிதாகப் பெருகிக் கொண்டிருக்கும் தொற்றா நோய்களின் விகிதாச்சாரம் ஆகியவற்றோடு முதுமையடைந்து கொண்டிருக்கும் மக்கள் தொகை விவகாரமும் நமக்கிருக்கும் மற்ற கடுமையான சவால்களாகும்
  • இப்போது இருக்கும் நிலையில் எதிர்வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் 65 வயதினருக்கும் மேற்பட்டவர்களாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக மலேசியாவும் திகழும்.
  • மலேசியாவில் பின்பற்றப்படும் இருநிலை சுகாதார சேவைகளின் காரணமாக நமக்கிருக்கும் வளங்களைப் பகிர்ந்து பயன்படுத்துவதில் பற்றாக்குறை, ஆள்பல பற்றாக்குறை மற்றும் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையில் இருக்கும் வருமான இடைவெளி போன்ற அம்சங்கள் சவால்களாக உருவெடுத்திருக்கின்றன.
  • இதனை எதிர்கொள்ள இரண்டு விதமான உருமாற்றத் திட்டங்களில் நாங்கள் தற்போது ஈடுபட்டிருக்கிறோம்.
  • முதலாவது நாம் தற்போது வழங்கிக் கொண்டிருக்கும் அடிப்படை சுகாதார சேவைகளை மேலும் விரிவாக்குவதாகும். தொடக்க காலத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன்காக்க செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் நாட்டின் மிகவும் பின்தங்கிய உட்புறங்களிலும் சிறப்பாகச் செயல்படுகின்றது. இதனை மேம்படுத்தி தற்போதைய நவீனத் தேவைகளுக்கு ஏற்பவும் – அதிகரித்து வரும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சை வழங்குவதில் ஏற்பட்டிருக்கும் தேவைகள் உயர்ந்து வருவதன் காரணமாகவும் அதனை சமாளிக்கும் நோக்கிலும் விரிவாக்கும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
  • இரண்டாவது, சுயமாக சுகாதாரக் காப்புறுதித் திட்டத்திற்கான நிதி சூழ்நிலையை உருவாக்குவதாகும். இலாப நோக்கின்றி அரசாங்கமே ஏற்று நடத்தும் வண்ணமும், மக்கள் சுயமாகவே பங்கு பெறும் வண்ணமும் இந்தத் திட்டம் உருவாக்கப்படும். இதன் மூலம் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையில் ஒரு பாலமாக இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முடியும். பொது சுகாதார சேவைகளில் ஏற்பட்டிருக்கும் மக்கள் நெருக்கடியைக் குறைக்க முடியும் என்பதோடு, தனியார் மருத்துவத் துறைகளில் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் அம்சங்களை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • இவ்வாறாக பொது மற்றும் தனியார் துறைகளை இணைத்துச் செயலாற்றுவதன் மூலம் – ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கிக் கொள்வதன் மூலம் – மிகப் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கும் தொற்றா நோய்களின் ஆக்கிரமிப்பை நாம் ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும்.

15july_japansubra_1 15july_japansubra_2 15july_japansubra_3 15july_japansubra_4 15july_japansubra_7 15july_japansubra_8