கவிஞர் வைரமுத்து மணி விழா: அப்துல்கலாம் பங்கேற்பு

கவிஞர் வைரமுத்து மணி விழா: அப்துல்கலாம் பங்கேற்பு

sar

கவிஞர் வைரமுத்துவின் 60–வது பிறந்த நாள் விழா, அவர் பத்மபூஷன் விருது பெற்றதுக்கான பாராட்டு விழா வருகிற 13–ந்தேதி வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கோவை, கொடிசியா அரங்கத்தில் கவிஞர்கள் திருநாள் கலை இலக்கிய திருவிழாவாக நடைபெற உள்ளது. காலையில் நடைபெறும் கருத்தரங்கில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.

இதில் சக்தி நிறுவனங்களின் தலைவர் நா.மகாலிங்கம், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி விமலா, மலேசியா அமைச்சர் சரவணன் கலந்து கொள்கின்றனர். கவிஞர் வைரமுத்து சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு வைரமுத்துவின் மணிவிழா, பத்மபூஷன் விருது பெற்றதற்கு பாராட்டு விழா நடக்கிறது.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், தலைமை தாங்குகிறார். அமெரிக்காவை சேர்ந்த பால்பாண்டியன், சிங்கப்பூர் முஸ்தபா, நெதர்லாந்து பாஸ்கரன் கந்தையா, லண்டன் வீரா, சுவிட்சர்லாந்து கல்லாறு சதீஷ், மலேசியா ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

இதைத் தொடர்ந்து வைரமுத்துவின் படைப்புகள் குறித்து உரையரங்கம் நடக்கிறது. அப்போது கவிஞர்கள் திருநாள் விருது கவிஞர் கல்யாண்ஜிக்கு வழங்கப்படுகிறது. ‘‘வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம்’’ என்ற தொகுப்பு நூல் வெளியிடப்படுகிறது. மாலை 7 மணிக்கு இயக்குனர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் வைரமுத்துவை பாராட்டி வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

முன்னதாக 12–ந்தேதி காலை, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடக்கிறது. கோவை சிவானந்தா காலனியில் தொடங்கும் பேரணி காந்தி நகரில் நிறைவடைகிறது. இதில் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், படைப்பாளிகள் கலந்து கொள்கிறார்கள்.