"கலைஞர் டிவி' திமுகவுக்கு சொந்தமானது அல்ல: சிபிஐ நீதிமன்றத்தில் ஆ. ராசா தகவல்

"கலைஞர் டிவி' திமுகவுக்கு சொந்தமானது அல்ல: சிபிஐ நீதிமன்றத்தில் ஆ. ராசா தகவல்

raja

“கலைஞர் டிவி’ திமுகவுக்கு சொந்தமானது அல்ல. அதன் பங்குதாரர்கள் யாரென்றுகூட வழக்குத் தொடரும் வரை எனக்குத் தெரியாது என்று தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராசாவிடம் சிபிஐ குறுக்கு விசாரணை நடத்த தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி கடந்த வாரம் அனுமதி அளித்திருந்தார். அதன்படி, சிபிஐ சிறப்பு வழக்குரைஞர் யு.யு.லலித் திங்கள்கிழமை ராசாவிடம் குறுக்கு விசாரணையைத் தொடங்கினார்.

அப்போது யு.யு.லலித், “மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ராசா பணியாற்றியது, அப்போது அவர் செயல்பட்ட விதம், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டிவி, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோருடனான உறவு ஆகியவை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு ராசா அளித்த பதில்:

 “மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக 2004-இல் பொறுப்பேற்றேன். அதன்பிறகு  2007, மே மாதம் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றேன். எனக்கு முன்பு அப் பதவியில் திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன் இருந்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்ற போது பிரதீப் கோஷ் என்பவர் துறைச்  செயலராக இருந்தார். அதன்பின் சித்தார்த் பெஹுரா நியமிக்கப்பட்டார். தனிச் செயலராக ஆர்.கே.சந்தோலியா 2009-ஆம் ஆண்டு வரை இருந்தார். உதவி தனிச் செயலராக அகிலன் ராமநாதன் இருந்தார். அவர் வேறு துறைக்கு சென்றதால் அப் பொறுப்பில் ஆசிர்வாதம் ஆச்சாரி என்பவரை நியமித்தேன். அவர் 2009-அக்டோபர் மாதம் வரை பணியாற்றினார்.

யுனிடெக் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா, ஷாஹித் உஸ்மான் பால்வா உள்ளிட்டோரை வீட்டில் சந்தித்தது தொடர்பான நிகழ்வுகளை என்னால்  நினைவு  கூர முடியவில்லை. என்னைச் சந்திக்க வரும் நபர்களின் பட்டியலில் உள்ளவர்களைத்தான் பார்ப்பேன். மேலும், நீங்கள் குறிப்பிடும் நபர்களின் சார்பாக நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு நான் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை.

நானும் கனிமொழியும் திமுக உறுப்பினர்கள். அந்த முறையில் அவரை நான் அறிவேன். நான் சார்ந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் அவர். மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் என்னைச் சந்திக்க என் வீட்டுக்கு ஓரிரு முறை அவர் வந்துள்ளார்.

கலைஞர் டிவியை ஒரு “நேயர்’ என்ற முறையில் அறிவேன். அத் தொலைக்காட்சி திமுகவுக்கு சொந்தமானது அல்ல. 2007-இல் கலைஞர் டிவி தொடங்கப்பட்டது. அதைத் தொடங்கி வைத்தது யாரென்றே எனக்குத் தெரியாது. அதன் நிர்வாகிகள் குறித்தும் எனக்குத் தெரியாது. கனிமொழிக்கும், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கும் அதில் பங்கு இருப்பதுகூட 2ஜி அலைக்கற்றை வழக்கு தொடரப்பட்ட பிறகே அறிந்தேன்.

மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சராக இருந்தபோதும், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோதும் நீரா ராடியாவை சந்தித்துள்ளேன். டாடா நிறுவனங்கள் குழுமத் தலைவர் ரத்தன் டாடாவுடன் அவர் என்னை வீட்டிலும், அலுவலகத்திலும் சில முறை சந்தித்துள்ளார். ஆனால், நீரா ராடியாவுடன் நான் தொலைபேசியில் உரையாடிய நிகழ்வையோ, என்னை அவர் தொலைபேசியில் அழைத்ததாகவோ எனக்கு நினைவில்லை. அதே சமயம் நான் அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசியதில்லை என என்னால் கூற முடியும்’ என்றார் ராசா.

இதையடுத்து, ராசாவிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணை நடவடிக்கைகளைப் பதிவு செய்து கொண்ட சிறப்பு நீதிபதி சைனி, செவ்வாய்க்கிழமையும் குறுக்கு விசாரணை தொடர அனுமதி அளித்து வழக்கை ஒத்திவைத்தார்.

முன்னதாக, 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சித்தார்த் பெஹுரா தனது தரப்பு சாட்சியாக மத்திய தொழிற் துறை கொள்கை மற்றும்  மேம்பாட்டுத் துறையில் உதவிச் செயலராக பணியாற்றும் லலித் குமார் சர்மாவை ஆஜர்படுத்தினார். சித்தார்த் பெஹுரா வனத் துறை அமைச்சகத்தில் பணியாற்றிய போது லலித் குமார் சர்மாவும் அத் துறையில் இருந்தார். அது தொடர்பான சில ஆவணங்களை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார்.