ஒடிசாவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து: மோடியை சந்தித்து நவீன் பட்நாயக் கோரிக்கை

j5

 

ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பின் முதல்வர் நவீன் பட்நாயக் முதன் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

அப்போது ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என அவர் மோடியிடம் கோரிக்கை வைத்தார். அக்கட்சியை சேர்ந்த 24 எம்.பி.க்களுடன் 67 வயதான பட்நாயக் மோடியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்றி பிஜு ஜனதா தளம் சாதனை படைத்தது. மாநிலங்களவையில் அக்கட்சிக்கு நான்கு உறுப்பினர்கள் பலம் உள்ளது.

மோடியை சந்தித்த பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பட்நாயக், ஒடிசா மாநிலத்தின் முக்கிய தேவைகள் குறித்தும், தங்களது நீண்ட கால கோரிக்கையான சிறப்பு மாநில அந்தஸ்து பற்றியும் பிரதமரிடம் வலியுறுத்தினோம் என்று தெரிவித்தார். ஏற்கனவே சீமாந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் என அம்மாநில முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவும் வலியுறுத்தியுள்ளார்.

சிறப்பு மாநில அந்தஸ்து தவிர ரெயில்வே பட்ஜெட்டில் ஒடிசாவுக்கு 3160 கோடி ரூபாய் ஒதுக்கவேண்டும் என்று கோரிய பட்நாயக், இதன் மூலம் துறைமுகங்களை இணைக்க முடியும் என கூறியுள்ளார். தங்களது கோரிக்கையை பிரதமர் நிறைவேற்றி தருவார் என்று பட்நாயக் நம்பிக்கை தெரிவித்தார்.