எபோலா நோயாளிகள் இருந்த மருத்துவமனை மீது தாக்குதல்: 17 நோயாளிகள் தப்பி ஓட்டம்

எபோலா நோயாளிகள் இருந்த மருத்துவமனை மீது தாக்குதல்: 17 நோயாளிகள் தப்பி ஓட்டம்

Ebola-story

லைபீரியாவின் தலைநகரான மொன்ரோவியாவில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. நாட்டில் எபோலா நோயே இல்லை என்று கோஷமிட்ட அக்கும்பல் மருத்துவமனையின் கதவை உடைத்து அங்கிருந்த மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை தூக்கிச் சென்றது. இத்தாக்குதலை பயன்படுத்தி 17 எபோலா நோயாளிகளும் தப்பி ஓடிவிட்டதாக இச்சம்பவத்தை பார்த்த ரெபேப்பா வெஸ்சே என்ற பெண்மணி தெரிவித்தார்.

அவர் கூறிய தகவலை லைபீரியாவின் சுகாதாரத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பை சேர்ந்த ஜார்ஜ் வில்லியம்சும் உறுதிப்படுத்தினார். வில்லியம்ஸ் மேலும் கூறுகையில், தப்பிச்சென்ற 17 பேருக்கும் எபோலா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும், அவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாகவும் கூறினார். 

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் அனைவரும் இளம் வயதினர் என்றும் அவர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் வெஸ்சே மேலும் தெரிவித்தார். அந்நாட்டு அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப்புக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் நாட்டில் எபோலா என்ற நோயே கிடையாது என்று கோஷமிட்டதாக அவர் கூறினார்.