உக்ரைன்: நிலத்திற்கு அடியில் குடியிருப்பை அமைத்து வாழும் மக்கள்

உக்ரைன்: நிலத்திற்கு அடியில் குடியிருப்பை அமைத்து வாழும் மக்கள்

8642

நவம்பர் 18, உக்ரைன் நாட்டில் கடுங்குளிரில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மக்கள் நிலத்திற்கு அடியில் குடியிருப்பை அமைத்து வாழ்ந்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலேசிய விமானத்தை உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் தாக்கியதாகக் கூறி அதற்கான ஆதாரப் புகைப்படங்களும் அந்நாட்டு ஊடகங்களில் வெளியானது. இது ஒருபுறம் இருக்க, இந்தப் போர் வெப்பத்தைக் கூட உக்ரைன் நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் அங்கு நிலவும் கடுமையான குளிரைத்தான் அங்குள்ள மக்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஐரோப்பிய நாடான உக்ரைனில் தற்போது கடுங்குளிர் காலம் நிலவி வருகிறது. இதனால் இங்கு வாழும் பலரது உடலின் வெப்பநிலை கணிசமாக குறைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவிற்கு சூழ்நிலை நிலவுகிறது.

அடிக்கும் குளிருக்கு மக்கள் உறைந்து போய் விடும் அளவுக்கு அபாயகரமானதாக குளிர் வீசுகிறது. கடந்த ஆண்டுகளில் கடுங்குளிரில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். எனவே, முன்னெச்சரிக்கையாக இந்தாண்டு கிழக்கு உக்ரைனில் கடும் குளிர் வீசி வரும் பகுதியான டோனெட்ஸில் வாழ்ந்து வரும் பலர் தங்களது குடியிருப்புகளை நிலத்திற்கு அடியில் மாற்றிக் கொண்டுள்ளனர். உண்மையில் இந்த அன்டர்கிரவுண்ட் குடியிருப்பானது புரட்சிப் படையினருக்கும், உக்ரைன் படையினருக்கும் இடையிலான மோதலிலிருந்து தப்புவதற்காக அமைக்கப்பட்டதாகும். குட்டி வீடு போல இது உள்ளது. இந்த ஷெல்டரைத்தான் தற்போது குளிரிலிருந்து தப்புவதற்கும் இவர்கள் பயன்படுத்துகிறார்கள். சின்னதாக இருக்கும் இந்த ஷெல்டர்களில் குடும்பத்துடன் தங்கி வருகிறார்கள் உக்ரைனியர்கள். இங்கேயே சமைத்துச் சாப்பிட்டு, தூங்கி வருகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.