இந்திராவை போல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மோடி

இந்திராவை போல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மோடி

modi

புதுடில்லி : தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் மூலம் முன்னாள் பிரதமர் இந்திராவைப் போல் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியும் அனைத்து தரப்பினரிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக சுகாஸ் பல்ஷிகர், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எழுதி உள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
சுகாஸ் தனது கட்டுரையில் கூறியிருப்பதாவது : புதிய பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் தொழில்துறையில் ஒரு புதிய மலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலில் பா.ஜ., பெற்ற அமோக வெற்றியின் காரணமாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, சமீப காலங்களில் வேறு எந்த பிரதமரும் பெறாத அளவிற்கு உண்மையான அதிகார பலத்தை பெற்றுள்ளார். அதனாலேயே தனது அமைச்சரவையில் இடம்பெறும் உறுப்பினர்களை தேர்வு செய்தல், அவர்களுக்கான துறையை ஒதுக்குதல் உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் பொறுப்பும் மோடியிடமே விடப்பட்டது. மோடி, அவரது கொள்கை அடிப்படையில் அவரது அரசு எதிர்கொண்டுள்ள சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
இந்திராவுடன் ஒப்பீடு:


மோடியின் இத்தகைய துடிப்பான செயல்பாடுகள் இந்திராவின் ஜனநாயக வரலாற்றை திரும்பக் கொண்டு வந்துள்ளதால், அவர் இந்திராவுடன் ஒப்பிட்டு பேசப்படுகிறார். இவ்வாறான ஒப்பீடு, துடிப்பான ஒரு புதிய தலைமை கிடைத்துள்ளதை புரிந்து கொள்வதற்கு சான்றாக உள்ளது. 
முதல் சான்றாக விளங்குவது, நாட்டின் இக்கட்டான சூழ்நிலை, முக்கிய பிரச்னைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காணும் விதமாக அதிகப்படியான மக்கள், தேர்தல் மூலம் ஒரு குறிப்பிட்ட தலைவரை, குறிப்பாக 1971ல் இந்திராவை போன்று மோடியை தேர்வு செய்துள்ளனர். இந்திராவைப் போன்று மோடியும், தேர்தல் சமயத்தில் அரசியல் ரீதியிலான பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டார். இந்திராவைப் போன்றே மோடியும் நாட்டின் தலைமை பொறுப்பிற்கு வருவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு குரல் எழுப்பினர். இந்த எதிர்ப்புக்களை மீறியும் தனது கட்சி தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததால், எதிர்ப்புக்களை திறமையாக கையாண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு பா.ஜ.,விற்குள் மட்டுமின்றி வெளியிலும் பல சர்ச்சைகள், விமர்சனங்கள் எழுப்பப்பட்டது. பொது இடங்களிலும், மீடியாக்களிலும் எதிர்க்கட்சியினர் மோடியை பலவாறு விமர்சித்து கருத்து வெளியிட்டனர். 
எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் மோடியை தாக்கி விமர்சிப்பதில் படு ‘பிஸி’யாக இருந்தனர். ஆனால் மோடி தனது பிரச்சாரங்கள் மூலம் மக்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார். தாங்கள் தற்போது எதிர்கொண்டு வரும் ஏராளான பிரச்னைகளில் இருந்து தங்களை காப்பாற்ற வந்தவர் எனவே மக்கள் மோடியை நினைக்க துவங்கினர்.