ஜனவரி 30, 9வது உலக தமிழ் மாநாடு 29 ஜனவரி 2015 மாலை 04.00 மணி அளவில் மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள மலாய் பலகலைக் கழக வளாகத்தில் துவங்கியது. இந்த மாநாடு பிப்ரவரி 01ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த 9வது உலக தமிழ் மாநாட்டை அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மலாய் பல்கலைக்கழகம் இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து நடத்துகின்றன. டத்தோ ஸ்ரீ உத்தாமா சுவாமிவேலு மாநாட்டின் தலைவர். உலகம் முழுதும் இருந்து தமிழ் ஆய்வாளர்கள், மொழி வல்லுநர்கள் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர்கள் இந்த மாநாட்டில் பங்கு கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் பங்குகொள்ள தமிழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வைகை செல்வன் மற்றும் திரு, ராஜாராமன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவும் கோலாலம்பூர் வந்துள்ளனர். இவர்கள் தவிர சுமார் 700 பேர் இந்தியாவில் இருந்து இந்த மாநாட்டில் பங்கு கொள்ள வந்திருக்கிறார்கள் என மாநாடு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த மாநாட்டில் பல்வேறு துறை ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்க உள்ளனர். நேற்றைய நிகழ்வில் தமிழ் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து சென்னை பல்கலை கழக பேராசியர் திரு ஜெயதேவன் உரையாற்றினார். இந்த மாநாட்டிற்கு தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், லண்டன், கத்தார் கனடா, இலங்கை, அமெரிக்கா, ஜப்பான்., கொரியா என சுமார் 30 நாடுகளில் இருந்து ஆய்வாளர்கள் மாநாட்டிற்கு வந்திருக்கிறார்கள். இளைய சமுதாயத்தினர் பெரும் அளவில் இந்த முறை மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ் வளர்ச்சிக்கான ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்க உள்ளனர்.