பாரீஸ், 10 மார்ச் 2026 : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் 11-வது நாளாக தொடர்கிறது. ஈரானும் கடுமையான எதிர்தாக்குதல்களை நடத்தி வருவதால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்ற நிலை நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, முக்கியமான கடல்சார் வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பகுதி ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் போர் தொடங்கியதிலிருந்து அந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9,221.34) தாண்டியுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக போக்குவரத்து இந்த மாத இறுதி வரை தொடர்ந்தும் நிறுத்தப்பட்டால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 150 டாலர் (சுமார் ரூ.13,841.80) வரை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதற்கிடையில், ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள் அமெரிக்காவால் அல்ல, இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டவை என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது கச்சா எண்ணெய் விலை 100 டாலரை கடந்துள்ளதால் உலக சந்தையில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. உக்ரைன் போர் பிறகு எண்ணெய் விலை இவ்வளவு அதிகரித்தது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. ஈரான் தொடர்பான போர் சூழ்நிலை உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை கடுமையாக பாதிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்கா–ஈரான் போர் காரணமாக உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துவது குறித்து ஜி7 நாடுகள் இன்று பாரிஸில் அவசர ஆலோசனை நடத்துகின்றன. ஜி7 நாடுகளின் நிதியமைச்சர்கள் அவசர எண்ணெய் கையிருப்புகளை ஒருங்கிணைந்து உலக சந்தையில் வெளியிடுவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர்.
ஜி7 குழுவில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய முன்னணி தொழில்மயமான நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் இந்த குழுவுடன் இணைந்து செயல்படுகிறது.
அனைத்துலக எரிசக்தி ஆணையம் (IEA) உடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த நடவடிக்கை, உலகளாவிய எரிசக்தி சந்தையை நிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்கா இந்த யோசனையை வரவேற்றிருந்தாலும், இதுகுறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.





