என் தமிழ்

கம்போடியா – தாய்லாந்து அமைதி ஒப்பந்தம் உருவாக அன்வாருடன் இணைந்து செயல்பட்ட அமெரிக்கா : டிரம்ப் பாராட்டு

மணிலா, 18 நவம்பர் 2026 : கம்போடியா – தாய்லாந்து இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தை உருவாக்குவதில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இணைந்து பணியாற்றியதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது, தானும் அன்வார் இப்ராஹிமும் இணைந்து கம்போடியா – தாய்லாந்து இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட வழிவகுத்ததுடன், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மணிலாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், “கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டின்போது, அன்வாரும் நானும் இணைந்து கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினோம். இதன் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது” என்றார்.

மேலும், ஓராண்டுக்கு முன்பு ஒப்புக்கொள்ளப்பட்டபடி போர் நிறுத்தம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவதையும், அமைதி ஒப்பந்தம் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதையும் உறுதிசெய்ய அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதனிடையே, எரிசக்தி, முக்கிய கனிமங்கள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஆசியான் பிராந்திய நாடுகளுடன் அமெரிக்கா பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.

Scroll to Top