என் தமிழ்

ஆசியான் – தென் கொரியா 27ஆவது மாநாடு : வர்த்தகம், முதலீடு, செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியா வலியுறுத்தல்

கோலாலம்பூர், 17 நவம்பர் 2026 : மலேசியா – தென் கொரியா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் வலுப்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இணையவழி மோசடிகள் உள்ளிட்ட எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பதற்கான கூட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் மலேசியா வலியுறுத்தியுள்ளது.

27ஆவது ஆசியான் – தென் கொரியா உச்சநிலை மாநாட்டில் பேசிய மலேசியப் பிரதிநிதி, ஆசியான் மற்றும் தென் கொரியா இடையிலான பேச்சுவார்த்தை உறவுகளின் எதிர்காலப் பாதை, வியூக ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும், கொரியத் தீபகற்பத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதுடன் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணும் அணுகுமுறைக்கு மலேசியா தனது ஆதரவைத் தெரிவித்தது. இந்த நிலைப்பாடு, பிராந்திய ஒத்துழைப்பையும் சர்வதேச உறவுகளையும் தொடர்ந்து வலுப்படுத்தி, அனைத்துத் தரப்பினரின் நலன்களையும் பாதுகாப்பதில் மலேசியா கொண்டுள்ள உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

Scroll to Top