கோலாலம்பூர், 18 நவம்பர் 2026 : மலேசியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் மாநிலங்களை இணைக்கும் RM2.7 பில்லியன் மதிப்பிலான MADANI கடலடி கேபிள் இணைப்புத் திட்டம் (SALAM) செயல்படுத்தப்படவுள்ளது.
மொத்தம் சுமார் 5,500 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்படவுள்ள இந்தக் கேபிள் இணைப்பு, நாடு முழுவதும் 10 தரையிறங்கு நிலையங்களைக் கொண்டிருக்கும். இத்திட்டத்தை டெலிகாம் மலேசியா (TM) நிறுவனம் செயல்படுத்துகிறது. பிரான்ஸைச் சேர்ந்த கடலடி கேபிள் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான அல்காடெல் சப்மெரின் நெட்வொர்க்ஸ் (ASN) நிறுவனத்தின் தொழில்நுட்பம் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது.
தற்போதுள்ள கடலடி கேபிள்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மாற்று வழியாகச் செயல்பட்டு, நாட்டின் இணைய இணைப்புத் தடையின்றி தொடர்வதை SALAM உறுதிப்படுத்தும். மேலும், 5G சேவைகள், கிளவுட் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு மையங்களின் வளர்ச்சிக்கும் இது ஆதரவளிக்கும்.
இத்திட்டம் வெறும் இணையத் தரவுப் பரிமாற்றத் திறனை அதிகரிப்பதற்கான முயற்சி மட்டுமல்ல; மலேசியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை மேலும் பாதுகாப்பானதாகவும், தடைகளைத் தாங்கி தொடர்ந்து செயல்படக்கூடியதாகவும், எதிர்காலத் தேவைகளுக்குத் தயாரானதாகவும் மாற்றும் முக்கிய நடவடிக்கை என தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கும் வலுவான டிஜிட்டல் இணைப்பை வழங்குவதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.









