கோலாலம்பூர், 18 நவம்பர் 2026 : பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் மலேசியாவுக்கான இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது வருகைக்கும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டுக்கும் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணம் மலேசியா – பிரான்ஸ் உறவில் புதிய மற்றும் முக்கியமான அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, தொழில்நுட்பம், புத்தாக்கம், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த இது வழிவகுக்கும் என்றார்.
மேலும், மலேசியாவின் மடானி அரசாங்கத்துடன் இணைந்து இந்தப் பயணத்தின் மூலம் உருவான சாதகமான சூழலைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும், இரு நாடுகளின் பொதுவான இலக்குகளை நீடித்த வியூகக் கூட்டாண்மைகளாக மாற்றவும் உறுதிபூண்டுள்ளதாக கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.
இதன் மூலம் மலேசியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பிரான்ஸ் அதிபருக்கு நன்றி தெரிவித்த அவர், பாதுகாப்பான பயணமாகத் தாயகம் திரும்ப வாழ்த்துகளையும் தெரிவித்தார்.







