ஷென்சென், 18 நவம்பர் 2026 : 33ஆவது ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாலை சீனாவின் ஷென்சென் நகரைச் சென்றடைந்தார். இந்த மாநாட்டில் மலேசியாவின் பொருளாதார நலன்களை முன்னிறுத்துவதுடன், பிராந்திய மற்றும் உலக நாடுகளுடனான வர்த்தகம், முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவர் கவனம் செலுத்தவுள்ளார்.
பிரதமரை ஏற்றிவந்த சிறப்பு விமானம் நள்ளிரவு 12.29 மணிக்கு ஷென்சென் பாவோன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு சீனாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ நார்மன் முகமது உள்ளிட்ட மலேசிய மற்றும் சீன அதிகாரிகள் அவரை வரவேற்றனர். தொடர்ந்து, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 36 வீரர்கள் அணிவகுப்பு மரியாதை வழங்கினர்.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஷென்சென், அந்நாட்டின் முக்கிய தொழில்நுட்ப மையமாகத் திகழ்கிறது. ஹுவாவே, டென்சென்ட், BYD, DJI உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன.
நவம்பர் 18ஆம் தேதி நடைபெறும் APEC தலைமைச் செயல் அதிகாரிகள் உச்சி மாநாட்டில் அன்வார் உரையாற்றவுள்ளார். நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தில், பிராந்திய இணைப்பு, டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
நவம்பர் 20ஆம் தேதி சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்கும் அன்வார், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடனும் இருதரப்புச் சந்திப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
சீனா தொடர்ந்து 17 ஆண்டுகளாக மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது. 2025ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் RM541.54 பில்லியனை எட்டியுள்ளது. APEC அமைப்பில் 21 பொருளாதாரங்கள் உறுப்பினர்களாக உள்ளன. உலக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த அமைப்பின் தொடக்க உறுப்பினர்களில் மலேசியாவும் ஒன்றாகும்.







