புத்ராஜெயா, 06 நவம்பர் 2026 : மலேசிய ஒப்பந்தம் 1963 (MA63) அமலாக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், சரவாக் மாநிலத்திற்கு கூடுதல் சட்ட அதிகாரங்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கையெழுத்திட்டுள்ளார்.
இது தொடர்பாக, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு சமர்ப்பித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பிரதமர் ஏற்றுக்கொண்டதாகவும், சரவாக் மாநிலத்திற்கான போர்னியோ மாநிலங்களின் சட்ட அதிகாரங்கள் தொடர்பான 2026ஆம் ஆண்டு திருத்த உத்தரவு இதன் ஒரு பகுதியாக அமைந்துள்ளதாகவும் மடானி அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இந்த உத்தரவு சரவாக் மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படுவதுடன், பின்னர் மாமன்னரின் ஒப்புதலையும் பெறவுள்ளது. இந்த நடவடிக்கை, மலேசிய ஒப்பந்தம் 1963இன் கீழ் சரவாக் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.
இதன் ஒரு பகுதியாக, சரவாக் மாநிலத்தின் நிலச் சட்டம் 1974 (Land Code 1974 – Act 127) திருத்தப்படவுள்ளது. இதன் மூலம் ஏலத்தில் விற்கப்படும் பொருட்களின் நிர்வாகப் பொறுப்பைச் சரவாக் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைத்து, அதன் அதிகார வரம்பிற்குள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும்.
இந்த அதிகாரப் பகிர்வு படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்றும், ஏலப் பொருட்களின் நிர்வாகத்தைச் சரவாக் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைப்பது அதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய ஒப்பந்தம் 1963இன் கீழ் சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பான உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதில் மடானி அரசாங்கம் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்றும் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். மேலும், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், சபா மற்றும் சரவாக் மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு இந்த நடவடிக்கை முக்கியப் பங்காற்றும் என அவர் குறிப்பிட்டார்.







