என் தமிழ்

KTMB-யின் தீபாவளிச் சிறப்புக் காணொளி வெளியீட்டு விழா : சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்திய யுனேஸ்வரன் ராமராஜ்

கோலாலம்பூர், 06 நவம்பர் 2026 : மலேசிய ரயில்வே நிறுவனமான KTMB தயாரித்துள்ள ‘Cahaya 2 Jiwa’ எனும் தீபாவளிச் சிறப்புக் காணொளியின் சிறப்புக் காட்சியிடும் நிகழ்வு கடந்த நவம்பர் 2ஆம் தேதி கோலாலம்பூர் கே.எல். சென்ட்ரலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், தீபாவளி என்பது ஒளியின் திருநாள் மட்டுமல்ல; அன்பு, தியாகம் மற்றும் சமூக ஒற்றுமையின் அடையாளமாகவும் திகழ்கிறது எனத் தெரிவித்தார்.

KTMB தயாரித்துள்ள ‘Cahaya 2 Jiwa’ காணொளி வெறும் தீபாவளி வாழ்த்துச் செய்தியாக அமையாமல், அன்பு, தியாகம் மற்றும் பல இன மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் படைப்பாக அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார்.

மலேசியாவின் ரயில்வே கட்டமைப்பு வளர்ச்சியில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலம் முதலே இந்தியச் சமூகம் முக்கியப் பங்காற்றி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ரயில் பாதைகள் அமைத்தல், தொழில்நுட்பப் பணிகள், ரயில் நிலையப் பராமரிப்பு மற்றும் ரயில் என்ஜின் இயக்கம் எனப் பல்வேறு நிலைகளில் இந்தியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, சில இந்தியக் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக ரயில்வே துறையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது என்ற அவர், நாட்டின் ரயில்வே வளர்ச்சிக்குப் பங்களித்த தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற இந்தியப் பணியாளர்களுக்குத் தமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். அதேவேளையில், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களின் கூட்டு முயற்சியே மலேசியாவின் வளர்ச்சிக்கு வலுசேர்த்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, தீபாவளியை முன்னிட்டு ETS ரயில் பயணிகளுக்கு 600 சிறப்புப் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன. இந்நடவடிக்கை பயணிகளிடையே பண்டிகைக் கால மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், பல்வேறு இன மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தியது.

இந்நிகழ்வில் KTMB குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ அஸ்லான் ஷா அல் பக்ரி, மலேசியன் ரிசோர்சஸ் கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் டத்தோ டெல் அக்பர் கான் மற்றும் வாக்கிங் ஜென்டில்மேன் நிறுவனத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் டத்தோ பஹ்லாவான் முகமட் ரசிப் ஹாஜி இத்ரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், ‘Cahaya 2 Jiwa’ காணொளியை உருவாக்கிய தயாரிப்புக் குழுவினருக்கும் KTMB நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் யுனேஸ்வரன் ராமராஜ் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

கலாசாரமும் நம்பிக்கையும் வேறுபட்டிருந்தாலும், அவை ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கும் மதிப்பதற்கும் தடையாக இருக்கக்கூடாது என வலியுறுத்திய அவர், மலேசியாவின் பன்முகத்தன்மையை நாட்டின் பலமாகக் கருதி மக்கள் ஒற்றுமையுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றார்.

“ஒன்றிணைந்து நாட்டையும் தேசிய ஒற்றுமையையும் கட்டியெழுப்புவோம்” என்ற உணர்வுடன், இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் தொடர்ந்து பேண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நிறைவாக, அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளையும் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.

Scroll to Top