மலாக்கா, 07 நவம்பர் 2026 : மலாக்கா மாநிலத்தின் செர்காம் (N.26) சட்டமன்றத் தொகுதியில் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளர் அலோங் ஃபாய்க் மற்றும் தேர்தல் பணிக்குழுவினரைச் சந்தித்த ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், பின்னர் அவருடன் இணைந்து அப்பகுதி மக்களின் வீடுகளுக்குச் சென்று ஆதரவு திரட்டினார்.
முன்னதாக, செர்காம் தொகுதியின் ஹராப்பான் தலைமையகத் தேர்தல் நடவடிக்கை மையத்திற்குச் சென்ற யுனேஸ்வரன், அங்கு தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த குழுவினருடன் கலந்துரையாடி, பிரசார ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, வேட்பாளர் அலோங் ஃபாய்க்குடன் உள்ளூர் மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் நலன் விசாரித்ததுடன், முதியவர்களையும் சந்தித்து உரையாடினார்.
இந்தச் சந்திப்பின்போது, அவர்கள் கடைசியாகச் சென்ற வீடு அலோங் ஃபாய்க்கின் சொந்தப் பாட்டி வீடு என்பது தெரியவந்தது. அப்போது, தேர்தல் பிரசாரத்தின்போது அமைதியாகவும் ஒழுக்கத்துடனும் செயல்பட வேண்டும்; யாருடனும் தகராறில் ஈடுபடக்கூடாது எனப் பாட்டி தனது பேரனுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், தேர்தல் பிரசாரம் வெற்றிகரமாக அமையவும் அனைத்து முயற்சிகளும் சிறப்பாக நடைபெறவும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.



36 வயதான அலோங் ஃபாய்க், புக்கிட் காத்தில் உள்ள ஜியாட்மாரா (GIATMARA) கல்வி நிலையத்தில் தொழில்திறன் பயிற்சி பெற்றவர். சமூகப் பணிகள், சிலம்பக் கலை, சாரணர் இயக்கம் மற்றும் இளைஞர் அமைப்புகளின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
மேலும், பெர்சத்துவான் செனி சிலாட் லங்கா ப்ரோமோ (Persatuan Seni Silat Langkah Bromo) அமைப்பில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் அவர், சிலாட் பயிற்றுநராகவும் பணியாற்றி வருகிறார்.
அலோங் ஃபாய்க் மற்றும் தேர்தல் பணிக்குழுவினர் பிரசாரக் காலம் முழுவதும் உற்சாகத்துடன் செயல்படுவதுடன், மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து கண்ணியமான முறையில் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என யுனேஸ்வரன் ராமராஜ் கேட்டுக்கொண்டார். செர்காம் தொகுதியில் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளராக அலோங் ஃபாய்க் இரண்டாம் எண் ஒதுக்கீட்டில் போட்டியிடுகிறார்.







