புத்ராஜெயா, 06 நவம்பர் 2026 : மலேசியாவில் கூகுள் நிறுவனம் கூடுதலாக 15 பில்லியன் அமெரிக்க டாலர் (RM61 பில்லியன்) முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்திருப்பது, 2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை செயற்கை நுண்ணறிவு (AI) நாடாக உருவாக்கும் இலக்கில் முக்கிய மைல்கல்லாக அமையும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.
இந்த முதலீடு வேலைவாய்ப்புகள், உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என அவர் குறிப்பிட்டார். கூகுள் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் ஒரு ஜிகாவாட்டுக்கும் அதிகமான புதிய தூய்மையான எரிசக்தியை இணைக்கவும், நெகிரி செம்பிலானில் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
மேலும், 80க்கும் மேற்பட்ட உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் கூகுள், புதிய வளாகக் கட்டுமானத்தின்போது ஆண்டுதோறும் 37,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027–2028 காலகட்டத்தில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் பங்களிப்பும் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வளாகம் செயல்படத் தொடங்கியதும் 9,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் நிலைநிறுத்தப்படும்; சராசரி ஊதியம் தேசிய சராசரியைவிட 45 விழுக்காடு அதிகமாக இருக்கும்.
இதற்கிடையில், 2027 முதல் 2031ஆம் ஆண்டு வரை சுமார் 8 லட்சம் மலேசியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க நான்கு புதிய திட்டங்களை கூகுள் செயல்படுத்தவுள்ளது. ஆசிரியர்கள், இளைஞர்கள், சிறு தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் மற்றும் வேலை தேடுவோர் இதன் மூலம் பயனடைவார்கள். தரவு மையப் பயிற்சி நிறுவனம் அமைக்கும் திட்டத்திற்கும் இலக்கவியல் அமைச்சு ஆதரவளிக்கவுள்ளது.
மலேசியா AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடாக மட்டுமல்லாமல், சொந்தமாகத் தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்கும் நாடாகவும் வளர வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், AI நகரங்கள் (AI Cities) மற்றும் AI பாதுகாப்பு (AI Safety) ஆகிய துறைகளில் கூகுளுடன் மூலோபாய ஒத்துழைப்பை ஏற்படுத்த அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். AI நகரங்களைச் செயல்முறை ஆய்வுக் களங்களாக உருவாக்குவதன் மூலம் போக்குவரத்து நெரிசல், வெள்ளப் பாதிப்புகள் மற்றும் பொதுச் சேவை தொடர்பான சவால்களுக்குத் தீர்வு காண முடியும் என்றும், மலேசிய AI பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வுத் திறன்களை மேம்படுத்த கூகுளின் நிபுணத்துவம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முதலீடு மலேசியாவின் தொழில்நுட்பத் திறன், உயர் மதிப்புள்ள தொழில்துறை மற்றும் நீண்டகால வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான முக்கிய அடித்தளமாக அமையும் என கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.







