கோலாலம்பூர், 06 நவம்பர் 2026 : தீபாவளித் திருநாள் மலேசிய இந்தியச் சமூகத்தில் புதிய நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கான உத்வேகத்தை ஏற்படுத்தட்டும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தீமையின் மீது நன்மையும் இருளின் மீது ஒளியும் வெற்றி பெறுவதை உணர்த்தும் இத்திருநாள், நேர்மறைச் சிந்தனையையும் புத்துணர்ச்சியையும் வழங்கும் நன்னாளாகும் என அவர் குறிப்பிட்டார். பல்லின, பல்மத, பலமொழி சமூகங்கள் வாழும் மலேசியாவின் உண்மையான பலம் ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்தில் அடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இன, மத வேறுபாடுகளைக் கடந்து அன்பையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
மனிதவள அமைச்சின் மூலம் அனைத்து மலேசியர்களுக்கும் சமமான வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாடு மற்றும் சிறந்த வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அதேவேளையில், மலேசிய இந்தியச் சமூகத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றம், கல்வி மேம்பாடு மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்த மித்ரா பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.
குறிப்பாக, இத்திட்டங்களின் பலன்கள் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சென்றடைந்து, அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம் என அவர் வலியுறுத்தினார்.
சம வாய்ப்புகள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட வளமான மலேசியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, தீபாவளித் திருநாள் அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும் என வாழ்த்திய டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.







