சிலாங்கூர், 28 செப்டம்பர் 2026 : தமிழ்க் கல்வி மற்றும் தமிழ்மொழி வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் முதல்முறையாக நடைபெற்ற ‘தகைமை’ தமிழ்க் கல்வி விருதுகள் 2026 விழா சிறப்பாக நடைபெற்றது.
சிலாங்கூர், ஷா ஆலாமில் உள்ள மிட்லெண்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இவ்விழாவில், தமிழ்க் கல்விக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 60,000 ரிங்கிட் ரொக்கப் பரிசுகளுடன் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில் ஜோகூர் கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த டாக்டர் கோமதி சங்கரன், சிறந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர் விருதைப் பெற்றார். அவருக்கு RM10,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
விருதைப் பெற்ற டாக்டர் கோமதி சங்கரன், தமது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்த விருதை அவர்களுக்கு அர்ப்பணிப்பதாகக் குறிப்பிட்டார்.
தமிழ்க் கல்விக்காக தொடர்ந்து சேவையாற்றி வரும் ஆசிரியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற இவ்விருது விழா, தமிழ்க் கல்வியின் முக்கியத்துவத்தையும் ஆசிரியர்களின் சேவையையும் முன்னிறுத்தும் நிகழ்வாக அமைந்தது.








