என் தமிழ்

மாஸ்டர்ஸ் ஜப்பான் 2026 : இரு பிரிவுகளில் மலேசிய ஜோடிகள் வெற்றியுடன் தொடக்கம்

கோலாலம்பூர், 12 நவம்பர் 2026 :  ஜப்பானில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் ஜப்பான் 2026 பூப்பந்து போட்டியின் முதல் சுற்றில் மலேசியாவின் ஆடவர் இரட்டையர் ஜோடியான மான் வீ சோங் – தீ காய் வுன் மற்றும் கலப்பு இரட்டையர் ஜோடியான ஹூ பாங் ரோன் – லாய் பெய் ஜிங் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

போட்டியின் முதல் சுற்றில் எட்டாம் நிலை வீரர்களான வீ சோங் – காய் வுன், தாய்லாந்தின் பீராட்சாய் சுக்புன் – பக்கபோன் தீரரட்சகுல் ஜோடியை எதிர்கொண்டனர். 56 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான ஆட்டத்தில் மலேசிய ஜோடி 21-18, 21-23, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்த சுற்றில் டென்மார்க்கின் டேனியல் லுண்ட்கார்ட் – மாட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியை அவர்கள் எதிர்கொள்ளவுள்ளனர்.

இதற்கிடையில், கலப்பு இரட்டையர் பிரிவில் ஹூ பாங் ரோன் – லாய் பெய் ஜிங் ஜோடி கனடாவின் ஜொனாதன் லாய் – கிரிஸ்டல் லாய் இணையை 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. அடுத்த போட்டியில் சீனாவின் முதல்நிலை ஜோடியான ஜியாங் ஜென்பாங் – வெய் யாசின் இணையை மலேசிய ஜோடி எதிர்கொள்ளவுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில், எட்டாம் நிலை வீரர்களான கோ சூன் ஹுவாட் – ஷெவோன் லாய் ஜெமி ஜோடி சீனாவின் ஜு யி ஜுன் – லி கியான் இணையிடம் 19-21, 23-21, 21-23 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் கே. லெட்சானாவும் ஜப்பானின் நட்சுகி நிடைராவிடம் 18-21, 21-18, 12-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் சியா வெய் ஜி – தியோ ஈ யி ஜோடியும் சீனாவின் ஹே ஜிடிங் – ரென் சியாங்யு இணையிடம் தோல்வியடைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் சென் டாங் ஜி – சான் வென் சே ஜோடியும் ஜப்பானின் யூயிச்சி ஷிமோகாமி – சயாகா ஹோபாரா இணையிடம் தோல்வியடைந்தது.

முதல் சுற்றில் சில மலேசிய ஜோடிகள் வெளியேறிய நிலையில், வீ சோங் – காய் வுன் மற்றும் பாங் ரோன் – பெய் ஜிங் ஜோடிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி நாட்டின் பதக்க நம்பிக்கையைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளன.

Scroll to Top