என் தமிழ்

பட்ஜெட் 2027: பூமிபுத்ரா சிறு ஒப்பந்ததாரர்களுக்கான நிதி ஒதுக்கீடு RM7.5 பில்லியனாக அதிகரிப்பு – பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர், 12 நவம்பர் 2026 : பூமிபுத்ரா ஒப்பந்ததாரர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை RM4 பில்லியனிலிருந்து RM7.5 பில்லியனாக உயர்த்துவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சிறிய அளவிலான ஒப்பந்ததாரர்கள் தங்களது தொழில் திறனை வளர்த்துக்கொள்ளவும், வணிகத்தை விரிவுபடுத்தவும், மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தவும் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பூமிபுத்ரா ஒப்பந்ததாரர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர், தனது முகநூல் பதிவில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் நிதியமைச்சர் பொறுப்பையும் வகித்து வருகிறார். அரசாங்கக் கொள்முதல் நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்க வசதிகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்கான நேரடி ஒப்பந்த நியமன உச்சவரம்பு RM200,000 ஆக உயர்த்தப்படும் என்றார்.

மேலும், ஒப்பந்ததாரர்களுக்கு நிதி உதவிகள் வழங்குவதுடன், டீசல் மற்றும் பிற்றுமின் விலை உயர்வால் ஏற்படும் செலவுச் சுமைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். அரசாங்கம் வழங்கும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, போட்டித்திறனும் நேர்மையும் கொண்ட அதிகமான பூமிபுத்ரா ஒப்பந்ததாரர்களை உருவாக்க வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

“ஒவ்வொரு திட்டமும் மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாகும். அவை சிறந்த தரத்துடன், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள், முழுப் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top