பினாங்கு, 27 செப்டம்பர் 2026 : மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு கிளையின் கல்விப் பிரிவு சார்பில், SPM தேர்வில் மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கான “Bengkel Teknik Menjawab dan Skor A+ SPM” என்ற சிறப்பு கல்விப் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
பட்டர்வொர்த் டிஜிட்டல் நூலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சியில் மலாய் மொழி, ஆங்கில மொழி, வரலாறு, கணிதம் மற்றும் ஒழுக்கக் கல்வி ஆகிய 5 முக்கிய பாடங்கள் இடம்பெற்றன. முதல் கட்டமாக 3 பாடங்களுக்கான பயிற்சி நடைபெற்ற நிலையில், மீதமுள்ள 2 பாடங்களுக்கான பயிற்சி அக்டோபர் 3ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.



இந்நிகழ்வை பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். நிகழ்வில் MBSP மன்ற உறுப்பினர் லிங்கேஸ்வரன் சார்மர் மற்றும் மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு கிளைத் தலைவர் தனபாலன் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
SPM தேர்வில் சிறப்பாகச் செயல்பட மாணவர்களுக்கு வினாக்களுக்கு முறையாகப் பதிலளிக்கும் உத்திகள் மற்றும் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
சமூகத்தின் இளைஞர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பல்வேறு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு கிளையின் கல்விப் பிரிவுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்த கல்விப் பிரிவு தலைவர் டாக்டர் ஆர். கோபிநாத்துக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.







