புத்ராஜெயா, 25 செப்டம்பர் 2026 : மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையர் ஸ்ரீ சோம்நாத் கோஷ், மலேசிய வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை நெறிமுறை அதிகாரி (Chief of Protocol) தூதர் இக்ராம் பின் முகமது இப்ராஹிமை விஸ்மா புத்ராவில் அறிமுக சந்திப்பாகச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, சோம்நாத் கோஷ் தனது நியமனத்தை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணமான Letter of Credence-ன் பிரதியை தலைமை நெறிமுறை அதிகாரியிடம் வழங்கினார். அவரை மலேசியாவுக்கு வரவேற்பதாக தூதர் இக்ராம் தெரிவித்தார்.
இந்தியா–மலேசியா இடையிலான நீண்டகால மற்றும் நெருக்கமான இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர். மேலும், இரு நாடுகளின் பிரதமர்களின் அண்மைய பயணங்கள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியா–மலேசியா இருதரப்பு உறவுகள் 70 ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.







