கோலாலம்பூர், 09 நவம்பர் 2026 : மலேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும் சபா மாநிலத்தின் சில பகுதிகளிலும் வரும் நவம்பர் 11ஆம் தேதி வரை தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
திரெங்கானு மாநிலத்தின் பெசுட், செத்தியு, டுங்குன், கெமாமான், மராங், கோலா திரெங்கானு, கோலா நெருஸ் ஆகிய பகுதிகளில் கனமழைக்கான அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளந்தான் மாநிலத்தில் பச்சோக், கோத்தா பாரு, தும்பாட், பாசிர் மாஸ், பாசிர் புத்தே ஆகிய பகுதிகளிலும், பகாங் மாநிலத்தில் குவாந்தான், பெக்கான், ரொம்பின் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபா மாநிலத்தில் குடாட் மற்றும் சண்டகான் பிரிவின் கீழ் உள்ள பைத்தான், தெலுபிட், லாபுக், சுகுட், சண்டகான், கினாபத்தாங்கான் ஆகிய பகுதிகளுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளந்தான், திரெங்கானு, பகாங் மாநிலங்களில் நவம்பர் 11ஆம் தேதி வரை மழை நீடிக்கக்கூடும் என்றும், சபாவில் நவம்பர் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை இந்த எச்சரிக்கை அமலில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வானிலை நிலவரத்தைக் கவனமாகக் கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வானிலை தொடர்பான அண்மைய தகவல்களை MetMalaysia-வின் அதிகாரபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம்.







