கோலாலம்பூர், 09 நவம்பர் 2026 : மலேசியாவின் தனித்துவமாக விளங்கும் பல்வேறு இன, கலாசாரப் பன்முகத்தன்மையைப் போற்றிப் பாதுகாப்பது, நாட்டின் நல்லிணக்கத்தையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியம் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ராமனன் ராமகிருஷ்ணனின் இல்லத்துக்குச் சென்ற பிரதமர், பின்னர் மலேசிய இந்தியர் காங்கிரஸ் (MIC) மற்றும் மேம்பட்ட கல்வி மேம்பாட்டு நிறுவனம் (MiED) இணைந்து ஏற்பாடு செய்திருந்த 2026ஆம் ஆண்டு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தமது முகநூல் பதிவில் இதனைத் தெரிவித்த அன்வார், நாட்டின் பன்முகக் கலாசாரத்தைத் தொடர்ந்து கொண்டாடி, பாதுகாத்து, பேண வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு எனக் குறிப்பிட்டார்.
பல இன மக்கள் ஒன்றிணைந்து வாழும் மலேசியச் சமூகத்தில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்துவதற்கு அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவர் தான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் மற்றும் இந்தியச் சமூகத்தினர் கலந்துகொண்டனர். தீபாவளியைக் கொண்டாடும் இந்தியச் சமூகத்தினர் அனைவருக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.







