என் தமிழ்

மலாக்காவில் ‘இளைஞர் கலந்தாய்வு தளம் 2026’ : தலைமைத்துவம் குறித்து இளைஞர்கள் கலந்துரையாடல்

மலாக்கா, 23 செப்டம்பர் 2026 : மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையும் மலாக்கா மாநிலத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த ‘இளைஞர் கலந்தாய்வு தளம் 2026’ நிகழ்ச்சி மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள WYF மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

செப்டம்பர் 20ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சி, “இன்றைய தலைமுறை, நாளைய தலைவர்கள்” என்ற கருப்பொருளில் இடம்பெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் தலைமைத்துவத்தினர் மற்றும் இளைஞர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மலாக்கா மாநில முதலமைச்சரின் பிரதிநிதியாக வருகை தந்த மலாக்கா மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ வி.பி. சண்முகம் நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக “அடுத்த தலைமுறையின் எதிர்காலம்; யார் பொறுப்பு?” என்ற தலைப்பில் சிறப்பு இளைஞர் கருத்தரங்கம் நடைபெற்றது. திரு. ஜான் கென்னடி சவேரியார் நெறியாளராகச் செயல்பட்ட நிலையில், விக்னேஸ்வரி ஜான் டி குரூஸ், தினகரன் சங்கரன் மற்றும் சுரேந்திரன் சுந்தரராஜ் ஆகியோர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இளைஞர்களின் எதிர்காலச் சவால்கள், சமூகப் பங்களிப்பு மற்றும் தலைமைத்துவப் பொறுப்புகள் குறித்து கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டதுடன், பங்கேற்பாளர்களுடனான கேள்வி-பதில் அமர்வும் நடைபெற்றது. மேலும், ‘மக்கள் அரங்கம்’ அமர்வு, பரதநாட்டியம் மற்றும் சிலம்பக் கலை நிகழ்ச்சிகள், சிறந்த சாதனையாளர்களுக்கான சிறப்பு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவர் முருகன் மணியம், தேசியப் பொதுச் செயலாளர் கோபிந்தரன், தேசியப் பொறுப்பாளர்கள், தேசிய உச்சமன்ற உறுப்பினர்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதிலுமிருந்து இளைஞர்கள் திரண்டது, தமிழ் இளைஞர்களின் ஒற்றுமை, உத்வேகம் மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக தேசிய இளைஞரணி தலைவர் அவினாஷ் சண்முகம் தெரிவித்தார்.

Scroll to Top