என் தமிழ்

சிகாமாட் இந்தியக் குடும்பங்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட தீபாவளி மளிகைக் கூடைகள் வழங்கிய யுனேஸ்வரன் ராமராஜ்

சிகாமாட், 07 நவம்பர் 2026 : சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் வாழும் இந்தியக் குடும்பங்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட தீபாவளி அன்பளிப்பு மளிகைக் கூடைகளை வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளதாக துணை மனிதவள அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

‘சிகாமாட் தீபாவளி அன்பின் மளிகைக் கூடை 2026’ என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு உதவி தேவைப்படும் குடும்பங்களின் பண்டிகைச் செலவைக் குறைக்கும் நோக்கில் இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு மளிகைக் கூடையிலும் இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளைத் தயாரிப்பதற்குத் தேவையான பல்வேறு சமையல் பொருட்கள் இடம்பெற்றிருந்தன. இந்த உதவிகள் குடும்பங்களின் தீபாவளி ஏற்பாடுகளுக்குச் சிறிய அளவிலாவது கைகொடுக்கும் என யுனேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இவ்விநியோக நிகழ்ச்சியின் முதல் நாளில் கெமாஸ் பாரு மற்றும் ஜெமந்தா பகுதிகளிலும், இரண்டாவது நாளில் பத்து அனாம் மற்றும் புலோ காசாப் பகுதிகளிலும் மளிகைக் கூடைகள் வழங்கப்பட்டன. தீபாவளி என்பது ஒளித் திருநாள் மட்டுமல்ல; மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்கும் குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதற்கும், உதவி தேவைப்படுவோரை நினைவுகூருவதற்குமான ஒரு சிறப்பான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய கெமாஸ் பாருவைச் சேர்ந்த ஆர்.எஸ். மணியம், ஜெமந்தாவைச் சேர்ந்த ரவி, பத்து அனாமைச் சேர்ந்த வெரமணி, புலோ காசாப்பைச் சேர்ந்த சப்ரினா ஆகியோருக்கும், சிகாமாட் நாடாளுமன்ற அலுவலகப் பணியாளர்கள், உள்ளூர் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

சிகாமாட் தொகுதி வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்த யுனேஸ்வரன், இத்திருநாள் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி, நலன் மற்றும் வளத்தைக் கொண்டுவர வேண்டும் என வாழ்த்தினார். இனம், மதம், பின்னணி வேறுபாடின்றி சிகாமாட் மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

Scroll to Top