என் தமிழ்

தேசிய தின வாழ்த்து : ஊழலில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் மக்களுக்கே திருப்பி வழங்கப்படும் – அன்வார்

கோலாலம்பூர், 31 ஆகஸ்ட் 2026 : தேசிய தினத்தை முன்னிட்டு மலேசிய மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து சட்டப்படி பறிமுதல் செய்யப்பட்ட நிதியை மக்களுக்கே திருப்பி வழங்க MADANI அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் உரையை வழங்கிய அவர், சட்ட நடவடிக்கைகள் மூலம் பறிமுதல் செய்யப்படும் பில்லியன் கணக்கான ரிங்கிட் நிதி, மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை வலுப்படுத்த பயன்படுத்தப்படும் என்றார். ஊழல், லஞ்சம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் பிடியிலிருந்து நாட்டை விடுவிப்பதே உண்மையான சுதந்திரத்தின் அர்த்தம் என அன்வார் குறிப்பிட்டார்.

“ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் இருந்து நாட்டை விடுவித்து, சட்டவிரோதமாகப் பெறப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட செல்வத்தை மீண்டும் மக்களின் நலனுக்காக பயன்படுத்துவதே நாம் நிலைநிறுத்த வேண்டிய சுதந்திரத்தின் அர்த்தம்,” என அவர் தெரிவித்தார்.

மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணமும், சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்படும் அரசுச் சொத்துகளும் மக்களின் நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே MADANI அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இதனிடையே, தேசிய தினத்தை முன்னிட்டு அனைத்து மலேசியர்களுக்கும் தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

Scroll to Top