ரவாங், 31 ஆகஸ்ட் 2026 : ஜாலான் கோலா காரிங், ரவாங் பகுதியில் அமைந்துள்ள தேவிஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 130 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை கொண்ட இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழாவில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய இந்திய காங்கிரஸ் தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் கலந்துகொண்டார்.
54 அடி உயரம் கொண்ட இராஜகோபுரத்துடன், வேத ஆகம விதிகளுக்கு ஏற்ப சிறப்பான சிற்ப வேலைப்பாடுகளுடன் ஆலயம் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். ஆன்மீகப் பணியை சிறப்பாக முன்னெடுத்த கோவில் நிர்வாகத்தினர், சிவஸ்ரீ குருக்கள், நன்கொடையாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.







