என் தமிழ்

ஒற்றுமையான மலேசியாவை பாதுகாப்போம் – தேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்தார் அமைச்சர் யுனேஸ்வரன்

31 ஆகஸ்ட் 2026 : சுதந்திரம் என்பது வெறும் விடுதலையை மட்டும் குறிக்கவில்லை; ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தையும் உள்ளடக்கியது என தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

தேசிய தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மலேசியாவின் சிறப்பை உருவாக்குவது மக்களிடையே நிலவும் ஒற்றுமையும், அனைவரும் இணைந்து கட்டியெழுப்பும் நல்லிணக்கமும்தான் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன உணர்வுகளைத் தூண்டும் கருத்துகளுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என்றும், மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கில் முன்வைக்கப்படும் பிரசாரங்களால் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மலேசியர்களாகிய நாம் நாட்டில் நிலவும் பல்வேறு இன, கலாசார வேறுபாடுகளை புரிந்துகொண்டு, அவற்றை மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறிய அவர், அண்டை வீட்டினருடன் பழகுவதும், அவர்களின் கலாசாரத்தை அறிந்துகொள்வதும், வேறுபாடுகளைக் கொண்டாடுவதும் முக்கியம் என்றார்.

“இறுதியில் நாம் தனித்தனி குழுக்களாக வாழவில்லை. ஒரே நாட்டை, ஒரே எதிர்காலத்தை, ஒரே தேசியக் கொடியைப் பகிர்ந்து வாழ்கிறோம்,” என யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.

ஒற்றுமையான மலேசியாவை தொடர்ந்து பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், அனைத்து மலேசியர்களுக்கும் தேசிய தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Scroll to Top