என் தமிழ்

CelcomDigi : 3,000க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் பயிற்சி

பினாங்கு, 13 ஆகஸ்ட் 2026 : சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (SMEs) டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் CelcomDigi Berhad, MY5G SME Digital Workshop திட்டத்தின் புதிய கட்டத்தை வடக்கு பிராந்தியத்தில் தொடங்கியுள்ளது. நான்காவது ஆண்டாக நடைபெறும் இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை நாடு முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட உள்ளூர் தொழில் முனைவோர் பயனடைந்துள்ளதாக CelcomDigi தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரத்தில் SME நிறுவனங்களின் போட்டித்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான நடைமுறை டிஜிட்டல் திறன்கள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளை வழங்குவது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த ஆண்டு தொழில்களின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப புதிய பயிற்சி முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதியதாக தொடங்கப்பட்டுள்ள தொழில்களுக்கு வலுவான டிஜிட்டல் இருப்பை உருவாக்குவது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு அன்றாட வணிக நடவடிக்கைகளில் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு தொழில்நுட்பத் தீர்வுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

மலேசியா முழுவதும் 14 இடங்களில் நடைபெறும் இத்திட்டத்தின் வடக்கு பிராந்தியப் பயிற்சி இந்த வாரம் தொடங்கியது. இதில் 300க்கும் மேற்பட்ட SME நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. Funding Societies Malaysia, Swipey, CTOS Data Systems, CardUp, MARA, SME Bank, Bank Pembangunan Malaysia, SME Corp, SAMENTA, Digital Penang, Onsmo Lighting Malaysia மற்றும் TikTok Shop Malaysia உள்ளிட்ட நிறுவனங்களும் இத்திட்டத்தில் பங்குதாரர்களாக இணைந்துள்ளன.

பினாங்கில் நடைபெற்ற கடந்த ஆண்டு பயிற்சியில் பங்கேற்ற Dapur Bakar Ayam Goreng Kunyit நிறுவனத்தின் உரிமையாளர்களான நூர் ஷம்சியா முகமட் ஃபாரூக் மரிக்கான் மற்றும் அவரது கணவர் முகமட் ஹஸ்னிசாம் அபு பக்கார், ஆன்லைனில் புதிய வாடிக்கையாளர்களைச் சென்றடைவதில் தங்களுக்கு இருந்த சிரமங்களுக்கு இந்தப் பயிற்சி நடைமுறை தீர்வுகளை வழங்கியதாக தெரிவித்தனர்.

மூன்று சக்கர வண்டியில் தொடங்கப்பட்ட இவர்களின் உணவுத் தொழில் தற்போது நாடு முழுவதும் 13 கிளைகளாக விரிவடைந்துள்ளது. இவர்களின் நிறுவனங்கள் CelcomDigi-யின் Business Postpaid மற்றும் Fibre சேவைகளையும் பயன்படுத்தி வருகின்றன.

இதனிடையே, Skuad 5G Edisi SME திட்டத்தின் கீழ் பினாங்கில் உள்ள Pasar Awam Bagan Ajam மற்றும் Pasar Awam Sri Muda உள்ளிட்ட பல சந்தைகளிலும் வணிகர்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 110க்கும் மேற்பட்ட வணிக உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் குறித்து அறியப்பட்டது.

CelcomDigi-யின் Chief Enterprise Business Officer டி. குகன், SME நிறுவனங்களுக்கான டிஜிட்டல் மயமாக்கல் சிக்கலானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், புதிய வாடிக்கையாளர்களை அடைவது, பணப்புழக்கத்தை நிர்வகிப்பது, உள்ளடக்கங்களை உருவாக்குவது மற்றும் சரியான கூட்டாளர்களைக் கண்டறிவது போன்ற நடைமுறை சவால்களுக்கு தொழில்நுட்பம் தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தொழில் முனைவோருடன் நேரடியாக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற களப்பணிகள் மூலம் டிஜிட்டல் மயமாக்கலை மலேசிய SME நிறுவனங்களுக்கு மேலும் பொருத்தமானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும், நடைமுறையில் செயல்படுத்தக்கூடியதாகவும் மாற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top