என் தமிழ்

37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகும் மணிரத்னத்தின் ‘இதயத்தை திருடாதே’

13 ஆகஸ்ட் 2026 : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜுனா, கிரிஜா ஷெட்டர் நடிப்பில் 1989ஆம் ஆண்டு வெளியான ‘இதயத்தை திருடாதே’ திரைப்படம், 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. மணிரத்னம் இயக்கிய முக்கியமான காதல் திரைப்படங்களில் ஒன்றான இப்படம், நாகார்ஜுனா நடித்த தெலுங்குத் திரைப்படமான ‘கீதாஞ்சலி’யின் தமிழ் பதிப்பாகும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குறுகிய காலமே வாழப்போகும் நிலையில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் காதலிப்பதை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது.

இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். திரைப்படம் தேசிய விருது மற்றும் நந்தி விருதுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘இதயத்தை திருடாதே’ திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தை மீண்டும் திரையரங்கில் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கவுள்ளது.

Scroll to Top