கோலாலம்பூர், 12 ஆகஸ்ட் 2026 : புருனே தருஸ்ஸலாம் நாட்டின் சுல்தானும் யாங் டி-பெர்துவானுமான சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா முஈஸ்ஸதின் வத்தௌலா, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நலம் மற்றும் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்தார்.
தமது உடல்நலம் மற்றும் நலனுக்காக புருனே சுல்தான் தெரிவித்த அக்கறைக்கும் பிரார்த்தனைகளுக்கும் பிரதமர் அன்வார் நன்றி தெரிவித்தார். அதேவேளை, புருனே சுல்தான் நல்ல உடல்நலத்துடன் தொடர்ந்து இறைவனின் பாதுகாப்பிலும் அருளிலும் இருக்க வேண்டும் என தாமும் பிரார்த்திப்பதாக அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலேசியா மற்றும் புருனே இடையிலான 27ஆவது தலைவர்கள் வருடாந்திர ஆலோசனை (ALC) அடுத்த வாரம் பந்தர் செரி பெகவானில் நடைபெறவுள்ளது. இதையொட்டி அடுத்த வாரம் புருனே சென்று சுல்தானை நேரில் சந்திக்க உள்ளதாகவும் பிரதமர் அன்வார் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த வருடாந்திர ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






