என் தமிழ்

தபுங் ஹாஜி விவகாரம் : வைப்பாளர்களுக்கு மடானி அரசு 3 உறுதிமொழி

12 ஆகஸ்ட் 2026 : 1 கோடிக்கும் அதிகமான தபுங் ஹாஜி (TH) வைப்பாளர்களின் நலனையும் நம்பிக்கையையும் பாதுகாக்கும் வகையில் மடானி அரசாங்கம் மூன்று முக்கிய உறுதிமொழிகளை அறிவித்துள்ளது. முதல் உறுதிமொழியாக, தபுங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கை முழுமையாக பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதியமைச்சர் II டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார். இதில் முக்கியமான அல்லது சில தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புள்ளிவிவரங்களும் மறைக்கப்படாது என அவர் கூறினார்.

இரண்டாவது உறுதிமொழியாக, எந்தத் தரப்பினருக்கும் பாரபட்சம் காட்டாமல் பொறுப்புக்கூறல் கொள்கை நிலைநாட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தபுங் ஹாஜி தொடர்பான RCI கண்டறிதல்களின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூன்றாவது உறுதிமொழியாக, எதிர்காலத்தில் இதுபோன்ற நிர்வாகப் பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாத வகையில் தபுங் ஹாஜியின் நிர்வாகம் மேலும் வலுப்படுத்தப்படும். இதற்காக தபுங் ஹாஜி சட்டம் 1995 (சட்டம் 535) திருத்தப்பட்டு, செயலில் உள்ள அரசியல்வாதிகள் தபுங் ஹாஜியின் முதலீட்டு நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருப்பதற்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபுங் ஹாஜி அரசாங்கத்துக்கோ அல்லது எந்தவொரு அரசியல் கட்சிக்கோ சொந்தமானது அல்ல என்றும், ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இஸ்லாமிய மக்கள் சிறுகச் சிறுக சேமிக்கும் நம்பிக்கையின் அடையாளமாக அது விளங்குகிறது என்றும் அமீர் ஹம்சா தெரிவித்தார். தபுங் ஹாஜி தொடர்பான RCI அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் விளக்க உரை நிறைவு அமர்வின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Scroll to Top