12 ஆகஸ்ட் 2026 : NXP மலேசியா நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட டிஜிட்டல் அமைச்சரான கோபிந்த் சிங் தியோ, தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் மலேசியாவை முன்னணி நுண்மின்னணு மையமாக உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
மலேசியாவின் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்திற்கு நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் குறைக்கடத்தி தொழில்துறை முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் கூறினார்.
ஒருங்கிணைந்த சுற்று வடிவமைப்பு (IC), மேம்பட்ட சிப் தொகுப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) வன்பொருள் உள்ளிட்ட உயர் மதிப்பு கொண்ட துறைகளில் மலேசியா முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் மற்றும் தனியார் துறை இணைந்து மேற்கொள்ளும் இலக்குவைத்த திட்டங்கள் மூலம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன்கள் வலுப்படுத்தப்படுவதுடன், உற்பத்தித் திறனும் அதிகரிக்கப்படுகிறது.
இதன் மூலம் தொழில்துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் முதலீடுகளை ஈர்ப்பதுடன், அதிக மதிப்புடைய தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மலேசியர்களுக்கு எதிர்கால உற்பத்தித் துறையை வடிவமைக்கும் தொழில்நுட்பங்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்கவும் முடியும் என கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.
எனினும், தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்காது என்றும், தொழில்நுட்பத் துறையில் உயர்தர திறன்களைக் கொண்ட மனிதவளத்தை உருவாக்குவதும் அதே அளவு முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
NXP Malaysia விரிவாக்கத் திட்டத்தின் நிகழ்வு மலேசியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் வலுவான உறவையும் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நம்பகமான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த நீண்டகால கூட்டாளியாக மலேசியா தொடர்ந்து விளங்குவதற்கான உறுதிப்பாட்டை இதுபோன்ற கூட்டாண்மைகள் வெளிப்படுத்துகின்றன என்றும் கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.






